சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் நேரில் ஆய்வு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கணபதி பேருந்து நிலையம் பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளிடம் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெறுவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களை பற்றி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தும், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென, கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகளை கூறினார்.

பின்னர் சரவணம்பட்டி பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக செயல்படுத்தப்படவுள்ள (COVID CARE CENTRE) சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பூந்தோட்டம் தெரு, இந்திரா நேரு வீதி, விநாயகர் கோயில் தெரு ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.