சந்தித்தேன்… சிந்தித்தேன்… எனக்காக அல்ல! உனக்காக!

எனக்காக அல்ல! உனக்காக (Not for me; but for you) என்ற இலட்சியத்தை நெஞ்சில் தாங்கி தொண்டாற்றும் உணர்வை வளர்ப்பதுதான் நாட்டுநலப் பணித் திட்டம் (NSS – National Service Scheme). மாணவர்களுக்கு விழிப்புணர்வையும், சேவை மனப்பான்மையையும் உருவாக்கும் இத்திட்டத்தில் எனது கல்லூரி நாட்களில் நானும் அங்கத்தினராக இருந்துள¢ளேன¢. எனது ஆளூமை வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் அடித்தளமாக இருந்தாலும், என்எஸ்எஸ் பயிற்சியும் முதன்மையான காரணி.கோவை மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான என்எஸ்எஸ்  முகாம், மதுக்கரையில் உள்ள ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஆறுமுகம் மற்றும் திரு.  லி.சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பள்ளி நிர்வாகி திரு. வி.சண்முகம் அவர்களும், முதல்வர் திருமதி. ரி.ரேகா மணிகண்டன் ஆகியோரும் முகாமிற்கு ஒத்துழைப்பும் உதவியும் செய்திருந்தினர்.

முகாம் நிறைவு விழாவில் “மாணவப் பருவம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான நாற்றாங்கால் பருவம். இப்பருவத்தில் என்ன விதைக்கின்றோமோ அதைத்தான் எதிர்காலத்தில் அறுவடை செய்ய முடியும். இதுபோன்ற முகாம்கள் மூலமாக மாணவர்கள், தகவல் பரிமாறும் திறன், கூட்டு முயற்சி, குழுப்பணி, பிரச்னைகளுக்கு தீர்வுகளைத் தேடுதல், மற்றவரைப் புரிந்து கொள்ளுதல், சமுதாய அக்கறை எனப் பலவற்றைத் தெரிகின்றனர். கேட்டுத் தெரிவதைவிட அனுபவத்தால் தெரிந்து கொள்ளும்போது, அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

தற்காலக் கல்விமுறை மாணவர்களைப் புத்தகப் புழுவாகவும், மதிப்பெண் குவிக்கும் இயந்திரமாகவும் மாற்றிவிடுகின்றது என்ற குற்றச்சாட்டுப் பொதுவாக நிலவினாலும், மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்க்கும் விதமாக நாட்டு நலப்பணித்திட்டம், சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, சுற்றுச்சூழல் மன்றம், செஞ்சுருள் மன்றம், அறிவியல் மன்றம், தமிழ் மன்றம், போக்குவரத்து மன்றம் எனப் பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றின்  மூலமாக மாணவர்கள் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதுபோன்ற தன்னார்வ அமைப்புகளில் மாணவர் களை அங்கத்தினராக சேர்த்து விட வேண்டும்.

இத்தருணத்தில், கவிஞர் மு.மேத்தாவின் கவிதை ஒன்று எனது நெஞ்சைத் தட்டுகின்றது. அது,

வரங்கொடுக்க தேவதைகள்

வந்தபோது தூங்கினேன்!

வந்தபோது தூங்கிவிட்டு

வாழ்க்கை எல்லாம் ஏங்கினேன்!

என்பதுதான் அது. வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்தி தனது அறிவையும் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களே சிறந்த ஆசிரியர்கள் என்பார். மாணவர்கள் தமது சொந்தக் காலில் நின்று சவால்களை எதிர்கொண்டு சாதனை படைக்கும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். வெறுமனே வகுப்பறைப் பாடங்களுடன் நின்று விடாமல் வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தரும் ஆசிரியர்களே தேசத்தின் சொத்தாக விளங்குகின்றார்கள்.

மக்களின் துன்பத்திற்கு காரணங்கள் இரண்டு, ஒன்று, அறியாமை, மற்றொன்று அலட்சியம். அறியாமை இருளைப் போக்குவதற்காகத்தான் கல்வி போதிக்கப்படுகின்றது. வள்ளுவரின் “கசடறக் கற்க” எனும் வாக்கிற்கேற்ப ஆசிரியர்கள், மாணவர்களின் மனதில் கசடு எதுவும் தங்காதவாறு கற்றுத் தர வேண்டும். பிறக்கும்போது யாருமே சாதனையாளராகப் பிறப்பதில்லை. இடைவிடாத முயற்சி, தொடர்ச்சியான பயிற்சியே ஒருவனுடைய திறமைகளை வெளிக்கொண்டுவருகிறது. ஆகவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கற்றுக் கொள்ளும் ஆர்வமும், கற்றதைச் செயலாக்கும் தீவிர முயற்சியும் ஒருவருக்கு இருந்தால், அவருடைய வெற்றிக்கு யாராலும் தடைபோட முடியாது.

தொடர்ந்து வெல்வதற்கு தொய்வின்றி முயலும் மனப்பான்¬ மயை இளமைப் பருவம் முதற்கொண்டே மாணவர்கள் மனதில் வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் முயலவேண்டும். அத்துடன் எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் அடிமனதில் பற்ற வைக்க வேண்டும்!

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.

சிந்தனைக் கவிஞர். டாக்டர்.கவிதாசன்,

இயக்குனர் மற்றும் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை, ரூட்ஸ் நிறுவனங்கள்.