நீதிமன்ற உத்தரவை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் : காவல்துறையின் அலட்சியத்திற்கு பி.ஆர்.நடராஜன் கண்டனம்

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்துள்ளது, இதனை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தின் சின்னவேடம்பட்டி,  சரவணம்பட்டி, சுந்தராபுரம், ஆர்.எஸ் புரம், அன்னூர், ராமநாதபுரம், குனியமுத்தூர்  உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில், பிரதான சாலைகளில் விநாயகர் சிலையை வைத்துள்ளனர்.

இதுகுறித்த செய்திக்குறிப்பில் பி.ஆர்.நடராஜன் குறிப்பிட்டிருந்ததாவது, இது திட்டமிட்டே செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். பந்தல் அமைத்து, தோரணம் கட்டி சிலை கொண்டு வந்து வைக்கும்வரை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இத்தகையோரின் மிரட்டலுக்கு காவல்துறை அடிபணிந்துவிட்டதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை அலட்சியமாக இருப்பது என்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் நான் பேசிய பிறகு ஓரிரு இடங்களில் மட்டும சிலை பறிமுதல், வழக்கு என்கிற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இது நீதிமன்றத்தில் நாங்கள் கடமையை செய்தோம் என ஏமாற்றுவதற்கான நடவடிக்கையாக கருதவேண்டியுள்ளது. பொது அமைதி கருதி உயர்நீதிமன்றம் கொடுத்த தடையை மீறி, மதப்பதட்டத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படும் இத்தகைய அமைப்பினர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கோவையின் எதிர்கால அமைதி கருதி வேறு சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டிருந்தார்.