மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளச்சிப்பணிகள் குறித்து ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி பகுதிகளில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன் செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று 13.08.2020 கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்திலுள்ள விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ஷ்ரவன்குமார் ஜடாவத், தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களிடம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறவேண்டும், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.


பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதையும், சளி, காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுமெனவும், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரையின் அளவு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை செய்திட வேண்டுமெனவும், தெரிவித்த ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர், அப்பகுதியில் நடைபெற்றுவரும் சாலை பணிகள் குறித்தும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் தொடர்ந்து காளப்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள குட்டைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதையும், தெற்கு உக்கடம் அன்பு நகரில் பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை அகற்றும் ரோபோடிக் 2.0 என்ற நவீன இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை தூய்மைப் பணிகள் நடைபெற்றுவருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்து, இப்பகுதியில் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இவ்வாய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் முருகன், தெற்கு மண்டல உதவி ஆணையார் டி.ஆர்.ரவி, உதவி செயற்பொறியாளர் கிருபாகரன், மண்டல சுகாதார ஆய்வாளர் சந்திரன், உதவி பொறியாளர் குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.