வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சியில் பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின்கீழ் வங்கிக் கடன் பெறுவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி செய்திக்குறிப்பில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு காலத்தில் சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்காமல் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின்கீழ் வங்கிக் கடன் வாங்க விரும்புபவர்கள் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி வங்கிக்கடன் உதவித்தொகை பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகளின் அலைபேசி எண், ஆதார் அட்டை எண், வங்கிக் கணக்கு புத்தகம், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் ஆகிய ஆவணங்களை பதிவு செய்து இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க ஏதுவாக மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இன்று மத்திய மண்டலத்திற்குட்பட்ட அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பி.என்.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அனைத்து சிறப்பு முகாம் நடைபெறும் பள்ளிகளிலுள்ள ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனவும் தெரிவித்த ஆணையாளர், டவுன்ஹால் போத்தீஸ் கார்னர் பகுதி மற்றும் வடவள்ளி பேருந்து நிலையத்தில் சாலையோர வியாபாரிகளிடம் கடன் பெறுவதற்கான விபரங்களை கேட்டறிந்து சிறப்பு முகாம்களில் பதிவு செய்து வங்கிக் கடன் பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் அரசன், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு ஆகியோர் உடனிருந்தார்கள்.