நகை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு

கோவை செல்வபுரம் பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நகை தயாரிப்பாளர்கள் சங்கமும் நகை வியாபாரிகள் சங்கமும் இணைந்து குழுக்களை அமைத்து கோவை மாநகராட்சி உடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக தங்க பட்டறைகள் அதிகம் இருக்கும் செல்வபுரம் பகுதியில் பல வீதிகளில் தொற்று வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு செயல்படும் தங்க நகை கடைகளையும், பட்டறைகளையும் உடனடியாக மூட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து லட்சக்கணக்கான தங்க நகை தயாரிப்பாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இதுகுறித்து அச்சங்கத்தின் சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களிடமும் தங்கள் நிலையை எடுத்துரைத்தனர்…

இதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் உத்தரவை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் நகை பட்டறைகள் இயங்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்தது.

இதைத்தொடர்ந்து செல்வபுரம், சலுவன் வீதி, செட்டி வீதி, இடையர் வீதி, தெலுங்கு வீதி உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பொற்கொல்லர்கள் மற்றும் தங்க நகை கடை உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில் “அமைச்சரிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எங்கள் பகுதியில் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக குழுக்கள் அமைத்து உள்ளோம். இந்தக் குழுக்களுக்கு உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் டிஜிட்டல் தர்மா மீட்டர் மற்றும் இதயத் துடிப்பு கண்காணிக்கும் ஆக்சி மீட்டர், சனிடைசர் தெளிக்கும் தெளிப்பான், கையுறை N95முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நாள்தோறும் காலை மாலை என இரண்டு மணி நேரம் தங்க நகை பட்டறை தொழிலாளர்களின் வீடுகளுக்கும் தங்க நகைக் கடையில் பணியாற்றுபவர் வீடுகளுக்கும் சென்று யாருக்கேனும் உடல் வெப்பத்தில் மாற்றம் இருக்கிறதா அல்லது இதயத்துடிப்பில் மாற்றம் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அப்படி இருப்பின் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து அவர்களை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்புவார்கள் மேலும் இந்த குழுவை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஒதுக்கி உள்ள பகுதிகளில் கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் மேலும் அந்த இடத்தின் தூய்மையையும் காக்கும் வண்ணம் செயல்படுவார்கள். இதன் மூலம் எங்கள் பகுதியை கொரோனா இல்லாத பகுதியாக விரைவில் மாற்றிக் காட்டுவோம் என்றார்.

செல்வபுரம் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளர்கள் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்க நகைத் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது.