கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த தினம்

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து, ஜூலை 13, 1953, அன்று தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் சாதாரண விவசாய குடும்பத்தில் ராமசாமித்தேவர் – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980 இல் “நிழல்கள்” திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலைப் பொழுது..” எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.

மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.

திரைப்பட பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.  இவர் ஜனவரி 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 5, 800 பாடல்களை எழுதியுள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் இசைஞானி இளையராஜாவுடனும், பின்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் பெரும் புகழையும், கலைமாமணி, பத்மபூஷன், சாகித்ய அகாதமி போன்ற பல மதிப்பிற்குரிய விருதுகளையும் பெற்றுள்ளன.