பறக்கும் படையினருடன் களஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மத்திய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பறக்கும் படை அதிகாரிகளுடன் களஆய்வு மேற்கொண்டார்கள்.

கோவை சிங்காநல்லூர் உழவர்சந்தையில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருந்த சுகாதாரப் பணியாளர்களிடம் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தி, மசக்காளிபாளையம் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும் இன்று (07.07.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும், கிழக்கு மண்டலம் உள்ள பாலன் நகர் மற்றும் லால்பகதூர் நகர் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் பறக்கும் படை அதிகாரிகளுடன் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்கள். டி.ஜே.நகர் பகுதியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டு, அப்பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள். பின்னர், பயனியர் மில்ரோடு பிரதான சாலையில் உள்ள குடிநீர் குழாய் நீர்க்கசிவினைப் பார்வையிட்டு உடனடியாக சரிசெய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, எல்லைத் தோட்டம் ரோடு பீளமேடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுவதை பார்வையிட்டார்கள். மேலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட உள்ள தேவாங்கா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மலர் அங்காடி வியாபாரிகளுக்கு கையுறைகள் அணிவதன் பயன்பாட்டை விவரித்து, கையுறைகளை வழங்கினார்கள்.

பூமார்க்கெட் பகுதியிலுள்ள மலர் அங்காடி புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவிட்டார்கள்.