டிக் டாக் தடையால் ஜாக்பாட்! – ஒரு கோடி டவுன்லோடுகளைக் கடந்த `சிங்காரி’

ஏற்கெனவே மித்ரோன் என்ற ஆப் அதிக பேரால் பதிவிறக்கப்பட்டு வந்த நிலையில், அந்த வரிசையில் இப்போது சிங்காரி சேர்ந்துவிட்டது.

டிக் டாக் தடை!

டிக் டாக் உட்பட 59 சீன ஆப்களை இந்திய அரசு தடை விதித்த நிலையில், டிக் டாக் போன்றே கிட்டத்தட்ட அதே செயல்பாட்டுடன் உள்ள இந்திய ஆப்களுக்கு நல்ல ஜாக்பாட் அடித்திருக்கிறது. அப்படியான ஆப்பான `சிங்காரி’ (Chingari) கூகுள் பிளே ஸ்டோரில் 1 கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகளைக் கண்டிருக்கிறது.

சீன இந்திய எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி சீனாவின் 59 ஆப்களைத் தடை செய்தது இந்திய அரசு. இதனால் சோகமடைந்த இந்திய டிக் டாக் கிரியேட்டர்கள், பொழுதுபோக்குக்கு வேறு ஆப்பை தேட ஆரம்பிக்க, இந்த இந்திய ஆப்கள் சட்டென நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஏற்கெனவே மித்ரோன் என்ற ஆப் அதிக பேரால் பதிவிறக்கப்பட்டுவந்த நிலையில், அந்த வரிசையில் இப்போது சிங்காரி சேர்ந்துவிட்டது. 10 நாள்களில் 3 மில்லியன் டவுன்லோடுகளைக் கண்டு சாதனை படைத்துள்ளது சிங்காரி.

எங்கள் ஆப்பை விற்க மாட்டோம்!

இதைப் பற்றி கருத்து தெரிவித்த சிங்காரி நிறுவனர் பிஸ்வதமா நாயக், “எங்கள் ஆப்பை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பலர் எங்கள் ஆப்பில் பதிவுசெய்து, வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கையும், தரமான சேவையையும் வழங்க எங்கள் நிறுவனம் தொடர்ந்து உழைக்கும்” என்றார்.

மேலும், எந்த நிலையிலும் இது இந்திய ஆப்பாகத்தான் இருக்கும். வருங்காலத்தில் கூகுள், ஃபேஸ்புக் என யார் கேட்டாலும் எங்கள் ஆப்பை விற்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார். இந்த ஆப் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பங்களா, குஜராத்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

 

 

Source : Vigadan