காணொளி வாயிலாக புகார்கள் மனுக்கள் பெற நடவடிக்கை

கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்படி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் தெரிவித்ததாவது கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் கிருமியின் தாக்குதலால் பொதுமக்கள் பாதிக்கப்படாவண்ணம் நோய்த் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளில் பறக்கும் படையினர் தினசரி களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டலங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு முறையான உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதியளிக்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு வரும் நபர்களின் விபரங்கள் பதிவேடுகள் மூலமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் புகார்கள் தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களின் புகார்களை ஆணையாளர் துணை ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் சந்தித்து தெரிவிப்பதற்கு பதிலாக காணொலி வாயிலாக பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.