ஞாயிறுகளின் ஊரடங்கினை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்

-மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வேண்டுகோள்.

தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கோவையில் 05.07.2020,12.07.2020,19.07.2020 மற்றும் 26.07.2020 நான்கு ஞாயிற்றுக்கிழமை நாட்களில் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கினை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக கடைபிடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி கேட்டுக்கொண்டுள்ளர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக முதலவர் கொரோனா நோய் தொற்றினை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றார். அதேபோன்று பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தமிழக முதல்வர் ஆணை மற்றும் அறிவுரைகளின்படி, கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் 31.07.2020 வரை தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கினை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அத்துடன் 5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக உத்தரவிட்டிருந்தார்கள்.

அதனடிப்படையில், கோவையில் வருகின்ற 05.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளின்றி ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும், வருவாய் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். உழவர் சந்தைகள், மார்க்கெட்,  மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட்,  இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட எவ்வித கடைகளும் இயங்காது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இப்பகுதிகளிலிருந்து யாரும் வெளியே வரவோ, இப்பகுதிகளுக்கு வெளிநபர் உள்ளே செல்லவோ அனுமதி இல்லை. மருத்துவ அவசரங்கள், மகப்பேறு போன்ற அவசிய தேவைகள் தவிர வேறு எந்தக்காரணத்திற்கும் வெளியே வரவோ பிறர் இப்பகுதிக்குள் செல்லவோ அனுமதி இல்லை.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் பரவும் தன்மையுள்ள நோய் என்பதால், இதை முழுமையாக கட்டுப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் வணிகர்கள், தொழில்நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைவரும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.