வாளையாறு சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கோபுரம்

கேரளாவில் இருந்து கோவை வரும் கனரக வாகனங்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதை கண்டறிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக தமிழக – கேரள எல்லையான வாளையாறு உள்ளிட்ட சோதனைச்சாவடிகள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் வாகனங்கள் அதிகளவு எல்லைகளை கடந்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து கோவை வரும் லோடு இல்லாத கனரக வாகனங்களில் மக்கள் மறைந்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து வாளையாறு எல்லையில் கோவை மாவட்ட போலீஸ் தரப்பில் சுமார் 15 அடி உயரத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சோதனைச்சாவடியை கடக்கும் வாகனங்களில் உள்ளே யாரேனும் இருக்கிறார்களா என கண்காணித்து வருகின்றனர்.

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சர்வீஸ் ரோடுகளில் பயணிகள் வாகனம் திருப்பி விடப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் விரைவாக எல்லையை கடந்து வருகிறது.