அரசு ஊழியர்களுக்கு மட்டும் 7 பேருந்துகள் இயக்கம்

ஊரடங்கு தளர்வினால் கோவை மாநகரப் பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு மட்டும் 7 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மே 31 வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. இதன் அடிப்படையில் மாநில அரசுகள் இதற்கு தகுந்தார்போல் தளர்வுகள் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு சகஜமான நிலையில் இருந்து வருகிறது.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் மாநகரப் பகுதியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் அரசு பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த ஏழு பேருந்துகள் தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.

கோவை பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், கோவை மாநகரின் மூன்று பகுதிகள் என ஏழு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதற்காக கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் மற்றும் மத்தியப் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் நஞ்சப்பா சாலையிலுள்ள சிறைச்சாலை மைதானத்தில் செயல்பட உள்ளதாகவும், இதேபோல் உக்கடம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் உக்கடம் லாரிப்பேட்டையில் செயல்படவுள்ளதாகவும்,  மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மொத்த வியாபாரக் கடைகள் தடாகம் சாலையிலுள்ள ஜி.சி.டி பொறியியல் கல்லூரி மைதானத்தில் செயல்படவுள்ளதாகவும்  மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். கொரோனோ காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு 50 சதவீத அரசு ஊழியர்கள் அவர்களது பணியைத் தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.