கட்டடத் தொழிலாளருக்கு வி.கே.வி.குழுமம் நிவாரணம்

கோவை சிக்காரம்பாளையம் பகுதியில் கட்டடத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் தினக் கூலி தொழிலாளர்களுக்கு வி.கே.வி.குழுமத்தின் சார்பாக பத்து கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

கோவையை அடுத்த காரமடை ஒன்றியம்  சிக்காரம்பாளையம் கிராமத்தில் தினக்கூலி மற்றும் கட்டடத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா ஊரடங்கால் கட்டுமானத் துறையில் வேலையின்மை அதிகரித்து, போதிய வருமானமின்றி அந்த ஊர் மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் நிலையை அறிந்த சோமையனூர் பகுதியைச் சேர்ந்த வி.கே.வி.சுந்தர்ராஜ் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் கார்த்திகேஸ்வரி ஆகியோர் தங்களுடைய சொந்த செலவில் சுமார் 500 க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு பத்து கிலோ அரிசி மற்றும் பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்புகளை வழங்க முன்வந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கூறியதைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இது குறித்து வி.கே.வி.குழுமங்களின் தலைவர் வி.கே.வி.சுந்தர்ராஜ் பேசுகையில், ஊரடங்கு துவங்கியது முதல் சுமார்  ஒன்பதாயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும், பொதுமக்களும் அரசின் உத்தரவை ஏற்று முகக் கவசங்கள் அணிவது, பொது இடங்களில் சமூக விலகலைக் கடைபிடிப்பது போன்றவைகளைக் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேட்டுப்பாளையம் தாசில்தார், மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.