தொடரக் கூடாது ‘சோமனூர் சோகம்’

வாழ்வில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நம் வாழ்வே நம்பிக்கையில்தான் அடங்கியிருக்கிறது. காலையில் சூரியன் உதிக்கும் என்பது ஒரு நம்பிக்கையுடன்தான் படுக்கப் போகிறோம். சூரியன் உதிக்கிறது. விழித்தெழுவோம் என்ற நம்பிக்கையில்தான் உறங்குகிறோம். விதை முளைக்கும் என்றுதான் விதைக்கிறோம். அதுவும் முளைத்து செடியாகி, காயாகி, கனியாகி, உணவாகிறது. குழந்தை வளரும் என்று நம்புகிறோம். வளர்கிறது. திருமணம், தொழில், இன்பம், துன்பம் என்று நம் வாழ்வின் பலவும் நம்பிக்கையின் பேரில்தான் நடக்கிறது. ஆனால் சிலநேரம் நம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போய்  சில நேரங்களில் மழை நம்மை ஏமாற்றுவதுபோல்  நேரலாம்.

இருப்பினும், நம்பிக்கை என்பது எப்போதும் இயல்பான ஒன்று. இயற்கையான ஒன்று. அந்த நம்பிக்கையின் பேரில் தான் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள், நூற்றுக்கணக்கான பேருந்து களில் தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர். சில பேருந்துகள் விபத்துக்குள்ளாகலாம். அதற்கு ஓட்டுநரின் கவனக் குறைவு போன்ற பல காரணங்கள்  இருக்கலாம். அதுபோன்ற குறைகளையும் ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு, அவற்றை களைவதற்கு முயலலாம்.

ஆனால் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது கான்கிரீட் கூரை இடிந்து ஐந்து பேர் பலியாவதும், அந்த ஐந்து பேரின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வருவதும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. மழையால் பாதிக்கப்பட்ட கூரை என்று சப்பைக்கட்டு கட்டுவது அநியாயம். ஒரு மழை வீட்டின் குடிசையின் மண் சுவர் இடிந்து விழுவதற்கும், பேருந்து நிலையக் கூரை இடிந்து விழுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. அதுவும் சில மாதங்கள் முன்பு பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டபோது இது நல்ல நிலையில் இருந்ததாக வேறு கூறுகிறார்கள். பத்து நாள் மழையில் கான்கிரீட் கூரை விழுந்து விடுமா? அப்படி என்றால் ஊருக்குள் உள்ள மற்ற கட்டிடங்கள்? கட்டப்படும்  மேம்பாலங்களின் நிலை என்ன?  என்ன சொல்ல வருகிறார்கள்?

ஏழையின் குடிசையும் மண் சுவரும் இயலாமையைக் காட்டுபவை. பணம் இருந்தால் எந்த மனிதனும், தான் குடியிருக்கும் இடத்தைத் தானே சாகும் அளவுக்கு வைத்துக் கொண்டிருக்க மாட்டான். உடனடியாக அந்த மண் சுவரை இடித்துவிட்டு செங்கல் சுவர் கட்டுவான். இல்லையேல் வேறு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு குடி போ வான். சாவதற்கு தயாராக மாட்டான்.

ஆனால் அரசாங்கம் என¢பது அப்படிப்பட்ட அமைப்பு அல்ல. சர்வ சக்தி படைத்தது. ஏராளமான செல்வமும், தாராளமான அறிவும், ஏகப்பட்ட ஆள் பலமும், சட்ட அதிகாரமும் பொருந்தியது. அதன் கட்டுப்பாட்டின்கீழ் வரும் கட்டுமானம் என்பது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படுவது. அதன் பாரமரிப்பு என்பது மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படுவது. அந்த கட்டுமானம் சரியான முறையில் கட்டப்பட்டுள்ளதா, அதனால் மக்களுக்கோ மற்றவர் களுக்கோ பாதிப்பிருக்கிறதா என்றெல் லாம் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்கான எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் அரசாங்கத்துக்கு கண்டிப்பாக உண்டு.

இவற்றையெல்லாம்  நமது அரசாங்கம் சரியான முறையில் கடைப்பிடிக்கிறதா ஆய்வு செய்ததா என்று ஆராய்ந்து பார்த்தால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. நமது அரசு இயந்திரத்தின் இன்றைய நிலை, ‘ஏதோ விதி விட்ட வழியில் போய்க் கொண்டிருக்கிறது’ என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சோமனூர் பேருந்து நிலையக் கூரை இடிந்து விழுந்த சோகம்.

இது ஏதோ ஒரு முறை நடந்து விட்டது என்று அலட்சியமாகவோ, பரிதாபமாகவோ விட்டுவிட முடியாது. ஏனென்றால் நாட்டில்  இதுபோல் பலமுறை தொடர்ந்து நடக்கிறது. இவற்றுக்கெல்லாம்  அவ்வப்போது ‘உச்’ கொட்டுவதும், ஊடகச் செய்தியில் பார்த்து பரிதாபப்படுவதும் சரியான செயல் அல்ல. மேலும்  இது இன்றோடு முடியக் கூடிய விஷயமுமல்ல.

இதற்கு முன்பே இதுபோல பல எடுத்துக்காட்டுகள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்கடம் பகுதியில் கட்டப்பட்டிருந்த குடிசை மாற்று வாரிய வீடுகள் பாதிக்கப்பட்டு ஆபத்தை விளைவித்தது எல்லோருக்கும் நினை விருக்கும். அடுத்து, புத்தம்புதிதாக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வல்லுநர்கள் துணையோடு கட்டிய அம்மன் குளம் பகுதி கட்டிடங்கள் ஒரு பக்கம் பூமிக்குள் புதையுண்டு போய் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்போல போஸ் கொடுத்ததும் பலருக்கும் தெரியும். இப்போதும் சிங்காநல்லூர் பகுதி ஹவுசிங் யூனிட் எப்படி இருக்கிறது என்பதை ஒருமுறை சென்று பார்த்தால் புரியும். அப்போது உண்மையும்  ஆபத்தும் முகத்தில் அறையும்.மக்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய தகுதியும், வாய்ப்பும், கடமையும் உள்ள அரசாங்கமே இதை சரியாக செய்ய வில்லையென்றால் வேறு யாரிடம் சென்று இதை முறையிடுவது?

தமிழகமெங்கும் பல கட்டிடங்கள் இப்படி எமதர்மனது வாகனங்களாக நின்று கொண்டிருக்கின்றன. தேதிதான் குறிக்கப்படவில்லையே தவிர மற்றபடி ஆபத்து எப்போதும் காத்திருக்கிறது.

உடனே ஒரு விசாரணைக்கு உத்தரவிடுவது, சில இலட்சங்களைத்  தருவது  அல்லது ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்வது போன்றவை இதற்கு தீர்வு ஆகாது. இந்த சிக்கலை நேர்மையாக அணுக வேண்டும். உண்மையான ஜனநாயக முறையில் தீர்வு காண வேண்டும். அவரரவர் நியாயத்தை சொல்வதை விட்டுவிட்டு பொதுமக்கள் தரப்பு நியாயத்தைக் கேட்டு, அனைவருக்குமான பொதுத் தீர்வு என்ற முறையில் அணுக வேண்டும். அதைத்தான் இந்த சோமனூர் சோகச் சம்பவம் காட்டுகிறது.

ஒரு இரண்டு சக்கர வாகனம் வைத்திருந்தால் சாலை வரி தொடங்கி பல வரிகள் போடப்படுகின்றன. அதில் முக்கியமானது இன்சூரன்ஸ் எனும் காப்பீடு. ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் வகையில் வாகன ஒட்டிகளிடம் இருந்து இந்த காப்பீட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்த ஒரு சாதாரண போக்குவரத்து காவலருக்குக்கூட உரிமை உண்டு. ஓட்டுநர் உரிமத்தோடு, இன்சூரன்ஸ் கட்டவில்லையென்றால் வாகனம் ஓட்ட முடியாது. அப்படி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. எதற்காக என்றால் பொதுமக்கள் உயிர் என்பது அவ்வளவு முக்கியம்.எப்போதாவதுதான், எங்கேயாவது தான் விபத்து நடக்கிறது, அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று யாரும் சொல்வது இல்லை. அரசாங்கமும் விடுவதில்லை. இந்நிலையில் அரசாங்கமும் சரியாக நடந்து கொண்டு, தனது கடமையை சரியாக நிறைவேற்றுவது மிகவும் அவசியம்.

ஒரு தனி மனிதன் ஒரு கட்டிடம் கட்டி முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. அந்த தனிமனிதனுக்கு ஆயிரத்தெட்டு நடைமுறைகள், விதிமுறைகள், சட்டங்கள் என்று கடைப்பிடிக்கும் அரசு, தான் கட்டும் கட்டிடங்களில் ஏன் அவற்றை கடைப்பிடிப்பதில்லை? இந்த நிலை மாற வேண்டும். ஏனென்றால் பொறுப்பற்று செயல்படும் அரசாங்க ஊழியரின், அரசியல்வாதிகளின்  குடும்பத்தினரும், குழந்தைகளும்கூட ஒரு நாள் இதேபோன்ற ஓர் அரசாங்கக் கட்டிடத்தின்கீழ் நிற்க வேண்டி வரலாம். அப்போது அது இடிந்து அவர்கள் தலையிலும் விழலாம். ஏனெனில் ‘விதி  வலியது’. அந்த விதியை மதியால் வெல்ல வேண்டுமாயின்,கொஞ்சம் மனசாட்சியுடன்  செயல்பட்டு இதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடப்பதற்கு முன்னர் உடனடியாக  திறம்பட செயல்படுவது அவசியம். ஏனென்றால் யார் நினைத்தாலும், என்ன செய்தாலும் போன உயிர் திரும்ப வராது.