திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மதுக்கடைகளை மூட முதல்வரிடம் கோரிக்கை

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்ச்சியாக அல்லது தமிழகத்தில் கொரோனா தாக்குதல் முழுவதும் இல்லை என்ற நிலை வரும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றினை எதிர்த்து துரித நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசிற்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே ஏப்ரல் 29ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில் மதுவிலக்கை தொடர்ச்சியாக அமல்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் அரசின் சார்பில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கொரோனா பிரச்சனை முற்றிலும் தீராத நிலையில் மதுக்கடைகள் திறப்ப அனுமதிப்பதால் மது அருந்தி வேலைக்கு வருவதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாது. அதுமட்டுமல்லாமல் மது அருந்தியவர்களால், தேவையற்ற விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உருவாகும். இதனால் அச்சத்துடன் பாதுகாப்பையும் இக்கொரோனா காலத்தில் கடைப்பிடிப்பதில் தொழிற்சாலைகளுக்கு சிரமம் உள்ளதாகவும், அதனால் மதுவிலக்கை தொடர்ச்சியாக அமல்படுத்தும்படி முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், இக்கோரோனா தொற்று முழுமையாக இல்லை என அரசு அறிவிப்பு வரும் வரை மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.