நாளை முதல் பல்வேறு தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்படுவது தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன்குமார் ஜடாவத், மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் தொழிற்சாலைகள் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடித்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தங்கியுள்ள 40 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கவும், கிராமப்புறங்களில் ஸ்பின்னிங், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பவுண்டரி, வெட்கிரைண்டர் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நகரப்பகுதிகளில் தொழிற்பேட்டை மற்றும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நகரப்பகுதியில் உள்ள தோல் பொருள் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆட்சியர் ஆய்வுக்கு பிறகு 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், நகரப்பகுதி ஏற்றுமதி நிறுவனங்கள், கிராமப்புற நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிகளை தொடங்க இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகன அனுமதி பெற வேண்டும் எனவும், பொது இடங்களில் 5 பேர் ஒன்றாக கூடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.