சுவாமி விவேகானந்தரின் ‘வரம்’!

‘பலமே வாழ்வு, பலவீனமே மரணம்’ – வாழ்வின் அர்த்தத்தை இதைவிட எளிதாக உலகில் வேறு யாராலும் சொல்லிவிட முடியாது. இவை, நம் பாரத தேசத்தின் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அருளிய வாசகங்கள். எத்தனையோ ஜீவராசிகள் இம்மண்ணில் பிறக்கின்றன, இறக்கின்றன. அத்தனையிலும் உலகம் வாழ தன்னலமின்றி உழைத்த ஜீவாத்மாக்கள் சிலவே. பிற உயிர்களில் தன் ஜீவனைக் காணும் மெய்யறிவை உலகிற்குக் கற்றுத்தந்தது இந்து மதமே. அந்த இந்து மதம் தழைத்தோங்க, அதன் பெருமையை உலகமறிய செய்தவர்களுள் சிறப்புவாய்ந்தவர் நம் தேசத்தின் ஆன்மிக குரு சுவாமி விவேகானந்தர். கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் உலக மக்கள் அனைவருக்கும் தேவையான சக்தியைக் கொடுக்கும் வார்ததைகளுக்கு சொந்தக்காரர். உலகிலேயே அதிக இளைஞர் சக்தியைக் கொண்ட நாடு என்ற பெருமையைக்கொண்ட இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே இவரின் போதனைகள் இன்றியமையாதவை. வாழ்க்கை என்பது வாழ்வது. எப்படி வாழ்வது என்பதற்கு இந்திய இலக்கியங்கள், புராணங்கள் கூறும் உதாரணங்கள் ஏராளம். இளைஞர்களைக் குறித்து பேசும்போது சுவாமி விவேகானந்தரைத் தவிர்த்துவிட்டு பேசுவது இயலாத காரியம். ஏனெனில், அவர் இளைஞர்களுக்கு¢ எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வாழ்வியலை வகுத்துக் கொடுத்தவர். பயம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான வார்த்தைகளை இளைஞர்களுக்கு அறிவுச் சொத்தாக கொடுத்துச் சென்ற மூத்தவர் அவர்.

தற்போதைய உலகம், விஞ்ஞானத்தில் முதன்மை பெற்று விளங்குகிறது. அறிவியலின் தாக்கம் அடுப்படி வரை அமர்க்களப்படுத்துகிறது. அதேநேரம், இன்றைய விஞ்ஞானத்தால் ஒரு சிறிய வைரஸ் தொற்றுக்கான மருந்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் காரணமாக இறந்து வருகின்றனர். அனைத்துத் தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கிடைத்ததற்கரிய வரம், மனிதப் பிறவி. இவ்வளவு துயரங்கள் உலகளாவிய நோயால் வந்தபோதும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் வெளியே ஊர் சுற்றும் இளைஞர்களைக் காணும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. இரவும், பகலும் காவல்துறையும், மருத்துவத் துறையும், தூய்மைப் பணியாளர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த சமூகத்திற்காக பாடுபட்டு வருகின்றார்கள். ஆனால், ஆங்காங்கே சில இளைஞர்கள் கண்மூடித்தனமாக, குருட்டாம்போக்கில் வெளியே சுற்றித்திரிவதைப் பார்க்கும்போது அவர்களின் அலட்சியம் மற்றும் ஆணவப் போக்கின் உச்சத்தை உணர முடிகிறது.

உலகமே வீட்டில் முடங்கிக்கிடக்க இவர்கள் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் போடாமல், அதிலும் மூன்று பேராக ஊர் சுற்றுவதை வீரச்செயலாக செய்து வருகின்றனர். இது சமூக விரோதப் போக்கு என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
ஆயினும், அவர்களுக்கு வாழ்க்கையின் உன்னதத்தை அறிமுகப்படுத்தத் தவறியது யார் குற்றம் என்பதே இங்கே விளக்கப்பட வேண்டிய கேள்வி. வாழ்க்கையின் அர்த்தத்தையும், வாழ்வின் உன்னதத்தையும், நம் நாட்டின் பெருமையையும், மனதின் ஆற்றலையும், உடலைப் பேணிக் காத்தலைக் குறித்தும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த நாம் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. ‘இந்தியாவைப் பற்றி அறிய வேண்டுமானால் சுவாமி விவேகானந்தரைப் படி’ என்றார் கவிஞர் ரவீந்தரநாத் தாகூர். ஆம், இந்தியப் பண்பாட்டின் கருவூலமாக, பாரதத்தின் ஆன்மிக சக்தியின் நடமாடும் திருவுருவமாக அவதரித்தவர் சுவாமி.
ஆக, அவரைக் குறித்து இந்நேரத்தில் படித்துத் தெளிவது மனதிற்கு மட்டுமல்ல, உடலிற்கும் வலுசேர்ப்பதாக அமையும்.
‘லாக்டவுன்’ முடிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்? எப்படி வாழப் போகிறோம்? எவ்வாறு மீண்டும் எழுந்துகொள்ளப் போகிறோம்? வாழ்வை எப்படி சீரமைத்துக்கொள்ளப் போகிறோம்? வாழ்வாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தப் போகிறோம்? என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் நமது மனம் பெரும் சச்சரவில் சிக்கிக்கொள்ளும். ஆனால் சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் நமக்கு ஊக்கத்தைத் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

டிக்டாக், வாட்ஸ்அப், பேஸ்புக் என அறிவியலின் விந்தையில் அகமகிழ்ந்து சமூக ஊடக சந்¢தையில் வெட்டியாக பொழுதுகளை வீணடித்து, பிறரது வாழ்க்கையையும் குறிப்பாக, பெண்களை, மதங்களை அவமதிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. இந்த இணையதள சேவையைப் பயன்படுத்தி நம் வாழ்வில் எப்படி முன்னேறலாம்? இணையத்தில் கிடைக்கும் தகவல்களை அறிந்து அறிவாற்றலை எவ்வாறு உயர்த்திக்கொள்ளலாம்? இணைய வழி வருமானத்தை எப்படி அடையலாம் என்று சிந்தித்தால் அது முன்னேறுவதற்கான வழியாக இருக்கும். எதுவுமே இல்லை என்று நினைப்பதைவிட, எல்லாவற்றிலும் ஓர் வழி இருக்கிறது என்று நினைப்பதுதான் தன்னம்பிக்கை.

அந்தத் தன்னம்பிக்கையைத் தருவது விவேகானந்தரின் சொற்கள்.
‘உலகின் குறைகளைப் பற்றி பேசாதே. நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகைத் தூற்றாதே. குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்ல’ எனும் சுவாமி விவேகானந்தரின் வாக்கு, இன்றைய இளைஞர்களுக்கு அருள்வாக்கு.
‘இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச்செல்லுங்கள். இல்லையேல், உங்களுக்கும் மரங்கள், கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்பது இந்த கொரோனா காலத்தில் ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு ஏதுவான தர்ம உபதேசம். ‘உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன’ என்பது இந்த காலகட்டத்தில் நம் வாழ்வை எதிர்கொள்வதற்கான அரிச்சுவடி. ஆகவே, சுவாமியின் வாழ்க்கை இளைஞர்களுக்கான பாலபாடமாய் இருப்பது இன்றைய வரம்.