கொரோனா வைரசினால் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று வராது என உறுதியாக கூறமுடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் ஊகான் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது உலகத்தில் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனாவைரசு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தான் இது பரவுகிறது. கொரோனா இருக்கும் நபர் இரும்மும்போதோ அல்லது மூச்சுவிடும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய நுண்துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை மூச்சு மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கும் ஆண்டிபாடி சிகிச்சை முறை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நோயிலிருந்து விடுபட்டவர்கள் சில நாட்களுக்கு பின் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம், அவர்களுக்கு மீண்டும் தொற்று வராது என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது உலக சுகாதார அமைப்பு இந்த நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஒருமுறை கொரோனா வைரஸ் தாக்கினால் மீண்டும், அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளதாகவும், இதற்கு மருந்து கண்டுபிடிப்பது ஒன்றே முழுமையான தீர்வளிக்கும் என்றும் உலகா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.