ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவு வழங்கும் பேரூர் வட்டாச்சியர் அலுவலகம்

பேரூர் வட்டாச்சியர் அலுவலகம் சார்பாக தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, எளியவர்களுக்கு சமூக விலகலை கடைபிடித்து உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் லட்ச கணக்கான ஏழை தொழிலாளர்கள் வேலையின்றி அடுத்த வேளை உணவுக்கே கஷ்டம் படுகின்றனர். இந்நிலையில் இவ்வாறு உணவின்றி தவிக்கும் ஏழை, எளியவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பணியை அனைத்து மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்டத்தை பொறுத்த வரை பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உணவு வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் பிரபலமான பட்டீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதியான பேரூரில் தினமும் ஆயிரக்கணக்கான ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கும் பணியை பேரூர் வட்டாச்சியர் அலுவலக டெபுடி தாசில்தார் சத்யன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள மத்தி கவுடர் மகாலில் வைத்து சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை பேக் செய்து குனியமுத்தூர் மற்றும் பேரூர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.