மக்களின் நிலையறிந்து உதவிய சின்னதடாகம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

செங்கல்சூளை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சின்னதடாகம் பகுதி தின கூலி தொழிலாளர்களுக்கு அரிசி,காய்கறிகள் போன்ற அத்தியாவாசிய பொருட்களை தினமும் வழங்கி வரும் சின்னதடாகம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் செங்கல்சூளைகளில் பணியாற்றும் தின கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து பணியிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தின கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வரும் இவர்களின் நிலையறிந்து சின்னதடாகம் ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரவடிவு ஆனந்தன் மற்றும் துணை தலைவர் வேல்முருகன் ஆகியோர் முயற்சியில் தினமும் அரிசி மற்றும் காய்கறிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். பொன்னி ஏரி, தெற்கு மற்றும் வடக்கு வீதி, அம்பேத்கர் நகர் என பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று ஒன்றிய கவுன்சிலர் தீபிகா, வார்டு கவுன்சிலர்கள் சவுந்திர்ராஜ், கவிதா என ஒவ்வொரு குழுவாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதி தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியாளர்களுக்கு அவர்களுக்கு தேவையான அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்களை முன்னரே வழங்கி அவர்களின் பணியை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு தினமும் பிஸ்கட் பிரட் போன்றவற்றை முன்னால் வார்டு கவுன்சிலர் ஆனந்தன் வழங்கி வருகிறார்.அனைத்து தரப்பினருக்கும் உதவி வரும் இவர்களது சமூகபணியை அப்பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.