கொரோனா வைரஸ் அடுத்த கட்ட பரவலை தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

-மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவல் தற்போது அடுத்த கட்டத்தை நெருங்கும் நேரத்தில் இனி வரும் 10 நாட்களில் கோவை மக்கள் ஊரடங்கு உத்தரவை சரியான வழியில் பின்பற்றி அடுத்த கட்ட பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் உயிர்பலி மற்றும் நோய் தாக்குதலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையிலும் தமிழக அரசு மற்றும் சுகாதாரதுறையினர் நோய் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தானாக இயங்கும் கிருமி நாசினி இயந்திரத்தை ஜி.கே.கண்ட்ரோல் எனும் நிறுவனத்தினர் உருவாக்கி, தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் கோவை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதன் வழியாக உள்ளே நுழையும் போது இயந்திரத்தின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரேயரில் இருந்து வரும் கிருமி நாசினி மக்கள் மீது தெளிக்கும். மின் மோட்டார் மூலம் தானாக இயங்கும் இந்த இயந்திரத்தை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பாக இனி வரும் நாட்களை நோய் பரவாமல் தடுக்க சவாலாக எதிர் கொள்ள வேண்டும் என கூறிய அவர், ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அவர் நகர் முழுவதும் 14 சமையலறை மையங்கள் மூலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆதரவற்றோர், வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு சீரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.