500 பேருக்கு உணவு தயாரித்து வழங்கும் சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலயம்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் விதமாக, கோவை நல்லாயன் மண்டபத்தில் தினமும் 500 பேருக்கு உணவு தயாரித்து வழங்கும் பணி, சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலயம் சார்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலயம் சார்பாக ஆதரவற்றோர் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவுகளை வின்சென்ட் ரோடு நல்லாயன் மண்டபத்தில் தயாரித்து அங்கேயே சுகாதாரமான முறையில் பேக் செய்து பின்னர் கோவை தெற்கு தாசீல்தார் அருள் முருகன் தலைமையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.

இது குறித்து ஆயர் தலைவர் ரெவரென்ட் ராஜா பாஸ்கர் கூறுகையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி இந்த பணியை செய்து வருவதாகவும் ஊரடங்கு உத்தரவு உள்ள வரை உணவு வழங்கும் பணியை தொடர உள்ளதாக தெரிவித்தார். இந்த சேவையை ரெவரென்ட்ஸ் மதன சேகரன், சுரேஷ்குமார் மற்றும் ஆலய நிர்வாகிகள் அறிவழகன், ஆனந்தகுமார் உட்பட ஆலய பி.சி டி.சி உறுப்பினர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.