மஞ்சளின் அறிய நன்மைகள்

மஞ்சள் என்பது இந்தியாவின் முக்கியமான, காவி அல்லது மஞ்சள் நிற மசாலா நறுமணப்பொருள் ஆகும்; இதனை ஆங்கிலத்தில் Turmeric என்று அழைப்பர். உலகில் காணப்படும் நன்மை பயக்கும் உபபொருட்களுள் அதிக ஆரோக்கியம் அளிக்கும் ஒரு பொருள், மஞ்சள் ஆகும்.

மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் மஞ்சளுக்கு நிறத்தை அளிப்பதுடன், உங்களது உடலின் ஆரோக்கியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தும் ஒரு பொருளாக திகழ்கிறது. சாதாரண மூட்டு வலியை குணப்படுத்துவதில் இருந்து, நீரிழிவு நோய், அல்சைமர் என்னும் நியாபக மறதி நோய் என எல்லா வித நோய்களையும் போக்க மஞ்சள் உதவுகிறது.

மஞ்சளின் நன்மைகள் :

மஞ்சள் என்னும் நறுமணப்பொருள் ஏகப்பட்ட, எண்ணிலடங்கா நன்மைகளை கொண்ட ஒன்று; ஆரோக்கியம், அழகு, சமையல், கிருமி நாசினி, கலாச்சார செயல்பாடுகளில் முக்கிய அங்கம் வகித்தல் (குறிப்பாக இந்து கலாச்சார செயல்பாடுகள்) என எக்கச்சக்க நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது, மஞ்சள்.

மஞ்சள் என்னும் நறுமணப்பொருளை அரிணம், பீதம் என்றும் வழங்குவர்; இந்த மஞ்சள் உணவு பொருட்களுக்கு நிறம் மற்றும் சுவையை வழங்க உதவுவதோடு, பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது.

இயற்கையில், பாக்டீரியாவை எதிர்க்கும் ஒரு முக்கிய பொருளாகவும், ஆன்டிசெப்டிக் எனும் நச்சுத்தடை பொருளாகவும் மஞ்சள் செயல்படுகிறது. உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தவும், சளி. இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் மஞ்சள் உதவுகிறது.

மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள்

மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி – இன்ஃபிளமேட்டரி (வீக்கத்திற்கு எதிரான பொருள்) பண்புகள், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மிகச்சரியான சிகிச்சையை அளிக்க உதவுகிறது. இது குறித்த ஆராய்ச்சி முடிவுகள், மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது என்ற உத்திரவாதத்தினை அளித்துள்ளன.

கல்லீரலில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பது ஆக்சிடேட்டிவ் அழுத்தம் என்பது தான். மஞ்சளில் இருக்கும் குர்குமின் இந்த ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் போராடும் தன்மை கொண்டது; இது கல்லீரலில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பாதுகாத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

மனிதர்களில் ஏற்படும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் சிகிச்சை அளித்து உதவும் தன்மை குர்குமினுக்கு உண்டு.

நீரழிவு நோய்க்கான சிகிச்சையில் மஞ்சளின் பங்கு!

மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு மக்கள் சந்தித்து வரும் ஓர் முக்கிய பிரச்சனையான கொழுத்த கல்லீரல் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க, குர்குமின் உதவுகிறது. மேலும் நீரிழிவு நரம்பியல் தொடர்பான பிரச்சனையை தடுக்கவும் இது உதவுகிறது.

சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய, இந்நோயுடன் இணைந்திருக்கக்கூடிய சில குறிப்பிட்ட அறிவாற்றல் பற்றாக்குறை குறைபாட்டில் இருந்து நிவாரணம் அளிக்க மஞ்சள் உதவுகிறது. இக்குறைபாடு தொடர்பான வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.

குர்குமின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை/ குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுவதோடு, இரத்தத்தில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.

மெட்ஃபோர்மின் மருந்தை (டைப் 2 சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்து) உட்கொள்வதால் உருவாகும் பலன்களை காட்டிலும், மஞ்சளை மட்டும் சேர்மான உணவாக (அதாவது சப்ளிமெண்ட்டாக) உட்கொள்கையில், கிளைக்கேட்டட் ஹீமோகுளோபின் அளவுகள் (glycated hemoglobin levels) வெகுவாக குறைக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

குர்குமின் பீட்டா செல்களின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. பீட்டா செல்கள் இன்சுலினை – இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள்

மஞ்சளில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களுள் தலையாய ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி ஆகும். நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது; மேலும், இது நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை அதாவது நச்சுப்பொருட்களை தடை செய்யும் குணாதிசயம், நம் உடலை கிருமிகள் அண்டாத வண்ணம் பாதுகாக்கின்றன. மஞ்சளில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி ஆகும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

புற்றுநோயை தடுக்கும் மஞ்சள்

மலக்குடல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றிற்கு எதிராக போராடி, பாதுகாப்பை அளிக்க வல்லது மஞ்சள். மஞ்சள் அளிக்கும் இந்த பாதுகாப்பு விளைவு குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.

மஞ்சளில் இருக்கும் குர்குமினின் பண்புகள் குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு, படித்து வரப்படுகின்றன; இந்த குர்குமின் எனும் வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்த மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்க முடியும் என்று ஆய்வக ஆராய்ச்சி படிப்பினைகள் தகவல்களை தெரிவித்துள்ளன. இந்த வேதிப்பொருள், கீமோதெரபி சிகிச்சையை அதிக பயனுள்ளதாக மாற்றவும், இயக்கத்தில் இருக்கும் செல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

ஏற்கனவே உருவாகியுள்ள புற்றுநோய் செல்களை இறக்கச்செய்ய இக்குர்குமின் வேதிப்பொருள் உதவுகிறது; இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், எதிர்வினை ஆக்சிஜன் சிற்றினங்களை துடைத்தழிக்கவும் பயன்படுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், புரோஸ்டேட் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் எனக் கிட்டத்தட்ட எல்லா விதமான புற்றுநோய் செல்களின் மீதும் ஒரே மாதிரியான தாக்கத்தை குர்குமின் ஏற்படுத்துகிறது. புற்றுநோய் செல்களை கொன்று, ஆரோக்கியமான செல்களை காப்பற்றவதில், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கினை குர்குமின் ஆற்றுகிறது.

உடல் எடை குறைத்தல்/ உடல் வளர்சிதை மாற்றம்

உடல் பருமனாதலுடன் தொடர்புடைய வீக்கத்தை தடுக்க, மஞ்சளில் இருக்கும் குர்குமின் உதவுகிறது. இது கொழுப்பை எரிக்கும் நிகழ்வையும் துரிதப்படுத்துகிறது. இதை உறுதிப்படுத்த நமக்கு இன்னும் சில ஆய்வு கட்டுரைகள் தேவைப்படுகின்றன.

ரோடென்ட் மாடல்களில், கொழுப்பு திசுக்கள் வளர்வதை, மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் சாறு குறைத்துள்ளது. ஆஞ்சியோஜெனிக் செயல்பாட்டினை ஒடுக்குவதன் மூலம், மேற்கூறிய மாற்றத்தை மஞ்சள் செய்கிறது. ஆஞ்சியோஜெனிசிஸ் என்பது புது இரத்த குழல்கள் உருவாகும் நிகழ்வு ஆகும். கொழுப்பு திசு விரிவடைவதால், உடல் எடை அதிகரிக்கிறது; ஆனால், ஒடுக்கப்பட்ட ஆஞ்சியோஜெனிசிஸ் செயல்பாட்டின் மூலம் இந்த கொழுப்பு திசு விரிவடைவது தடுக்கப்படுகிறது.

குண்டாதல், நாள்பட்ட அழற்சி அல்லது வீக்கத்துடன் தொடர்புடையது; மஞ்சளால் வீக்கத்தை எதிர்த்து போராட முடியும் என்பதால், அது குண்டாதலை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் அடிப்போஸ் (கொழுப்பை சேகரிக்கும் செல்கள்) திசுக்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.

உடல் எடையை குறைப்பதற்கான சரியான உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை பின்பற்றும் பொழுது, குர்குமின் உடல் எடை அதிகரித்தலை தடுத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்பு

மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டி பாக்டீரியா நன்மைகளை கொண்டது; பாதிப்புகளை கொண்ட சிக்கலான சருமத்தில், மஞ்சளால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும். மஞ்சள் சருமத்தில் ஏற்படும் தடிப்புகள், வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த வல்லது.

மஞ்சளில் இருக்கும் குர்குமின், உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது என பல அறிவியல் அறிஞர்களும், மருத்துவர்களும் கூறியுள்ளனர்; இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆன்டி – ஆக்சிடென்ட்

மஞ்சளில் இருக்கும் முக்கிய மற்றும் அதிகம் செயல்படக்கூடிய ஒரு வேதிப்பொருள் குர்குமின் ஆகும்; மஞ்சளுக்கு சுவை மற்றும் நிறத்தை அளிக்கும் முக்கிய காரணி குர்குமின் தான். குர்குமினில் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளன மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்து காணப்படுகின்றன.

பலவித நோய்த்தொற்றுகளால் ஏற்படக்கூடிய ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் எதிர்த்து போராட, உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி அவசியம் தேவை. இக்கால மாடர்ன் உணவு பொருட்கள், மாறுபட்ட உறக்க முறைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் முறையற்ற வேதி வினைகளை வேரறுக்க ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மிகவும் அவசியம். இந்த சத்தினை நாம் மஞ்சளில் இருக்கும் குர்குமின் மூலம் எளிதில் பெறலாம்.

இதய ஆரோக்கியம்/ கொலஸ்ட்ரால்

உலகில், ஒவ்வொரு வருடமும் கார்டியோ வாஸ்குலார் நோய்க்குறைபாட்டால் 31% இறப்பு ஏற்படுகிறது. இந்த மதிப்பு கிட்டத்தட்ட 18 மில்லியன் மக்களை குறிக்கும்.

மஞ்சளில் இருக்கும் குர்குமின் இதய நோய்களை தடுக்கும் திறன் கொண்டது; மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் இதயத்தில் ஏற்படும் விஷத்தன்மையை தடுத்து, நீரிழிவு தொடர்பான இதய நோய் சிக்கல்களையும் தடுக்க உதவுகின்றன.

விலங்கு மாதிரிகளில், மஞ்சளின் இந்த பண்புகள் இதய செயலிழப்பு மற்றும் கார்டியாக் ஹைப்பர்ட்ரோஃபி (இதய தசைகளின் அசாதாரண விரிவாக்கம்) போன்ற நோய்க்குறைபாடுகளை தடுத்துள்ளன. மஞ்சளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு, அரித்திமியாக்கள் (முறையற்ற இதயத்துடிப்புகள்) நோய்க்குறைபாட்டையும் தடுக்கும் தன்மை கொண்டவை.

எலிகளில் நடத்தப்பட்ட சோதனை படிப்பினைகளில், மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஹைப்பர்டென்ஷன் எனும் அதிகப்படியான பதற்றத்திற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. ஹைப்பர்டென்ஷன் நோயை குணப்படுத்தவில்லை எனில், அது மாரடைப்பை ஏற்படுத்தலாம். கடுமையான கரோனரி நோய்க்குறி இருக்கும் மனிதர்களில், குர்குமின் ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, LDL எனும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைத்துள்ளது.

செரிமானம்

இரைப்பையில் ஏற்படும் அல்சர் (இரைப்பை புண்கள்) நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க குர்குமின் உதவுகிறது. குர்குமினின் இந்த ஆன்டி – அல்சர் பண்பு, அதன் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளில் இருந்து உருவாகிறது.

குர்குமினின் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உணவுக்குழாய் அழற்சி நோய்க்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. இதன் மூலம் குர்குமினால், GERD – எனும் இரைப்பை உணவுக்குழாய் ரெஃப்ளக்ஸ் நோய்க்குறைபாட்டிற்கும் சிகிச்சை அளிக்க முடியும்.

மஞ்சளால் பெருங்குடல் புண்களையும் குணப்படுத்த முடியும். மஞ்சள் இதர செரிமான நோய்க்குறைபாடுகளுக்கும் சிகிச்சை அளிக்க வல்லது; இதில் மலக்குடல் நோய், பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் பேதி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் அடங்கும்.

மூளை ஆரோக்கியம்/ அல்சைமர் நோய்

நியாபக மறதி எனும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளில், அறிவாற்றல் இயக்க திறனை மேம்படுத்த குர்குமின் உதவுகிறது. மஞ்சளின் குர்குமினில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த செயல்பாட்டிற்கு உதவும் காரணிகளாக அமைந்துள்ளன.

அல்சைமர் நோய், நரம்பு செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தி, அச்செல்களை சேதப்படுத்துகிறது. குர்குமின் இப்பிரச்சனைகளுக்கு எதிராக எதிர்த்து போராடி, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

மஞ்சளில் இருக்கும் மற்றொரு வேதிப்பொருளான டுமெரோன் அல்சைமர் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், டுமெரோன் வேதிப்பொருள் புதிய மூளை செல்கள் உருவாக்கத்தை தூண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த டுமெரோன் அல்சைமர் நோய்க்கான சிகிச்சை மற்றும் இது போன்ற நரம்பியல் சிதைவு நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களில், மூளையின் செயல்பாட்டினை தூண்டிவிட குர்குமின் உதவுகிறது. இன்சுலினை குறைக்கும் குளுக்கோஸ் விளைவுகளை மேம்படுத்தி, நீரிழிவு நரம்பியல் குறைபாடுகள் ஏற்படாமல் இது தடுக்கிறது.

இயற்கையான வலி நிவாரணி

பழங்காலத்தில் இருந்தே நமது சமுதாயத்தில், அடிபட்டால் அந்த இடத்தில் மஞ்சளை தடவும் பாரம்பரியம் தொன்றுதொட்டே இருந்து வருகிறது; இதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்று அறியாமலேயே நாம் இதை தன்னிச்சையாக செய்து வருகிறோம்.

மஞ்சளில் காணப்படும் குர்குமின், அதன் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனது; மஞ்சளில் அதிக இயக்கத்தில் இருக்கும் ஒரு முக்கிய பொருள் இந்த குர்குமின் தான். இது இயற்கையிலேயே காயங்களை குணப்படுத்துதல், வலிகளில் இருந்து நிவாரணம் அளித்தல் போன்ற பண்புகளை அடிப்படையிலேயே கொண்டது.

மஞ்சளில் கிருமிகளை நீக்கும் திறன் நிறைந்துள்ளது; மேலும் இது ஒரு நல்ல நச்சுத்தடை பொருள். சாதாரண காயங்கள் முதல், அதிக வேதனை அளிக்கும் தீக்காயம் வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் மற்றும் அவை அளிக்கும் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறன் மஞ்சளில் நிறைந்துள்ளது.

மாதவிடாய் வலியை குறைக்கும்

குர்குமினில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாயின் பொழுது ஏற்படும் வலியை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. குர்குமினின் இந்த பண்புகள், நரம்பியக்கடத்திகளை தகுந்தபடி ஒழுங்குப்படுத்துவதால், PMS நோய்க்குறைபாட்டின் அறிகுறிகளின் வீரியம் குறைக்கப்படுகின்றன.

கீல் வாதம்/ ஆர்த்ரிட்டிஸ்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் அழற்சித் தன்மையை குறைத்து, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது. மூட்டு வலியை குணப்படுத்துவதை காட்டிலும், அவ்வலி ஏற்படாமல் தடுக்கும் திறன் மஞ்சளில் நிறைந்துள்ளது என ஒரு ஆய்வுக்கட்டுரை கருத்து தெரிவித்துள்ளது.

முடக்கு வாதம் கொண்ட மனிதர்களில், மூட்டுக்களின் செயல்திறனை அதிகரிக்க குர்குமின் உதவுகிறது. இது குறித்த மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள், குர்குமினின் இச்செயல்திறனுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் திகழ்கின்றன. மஞ்சளில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆஸ்டியோ ஆர்திரிட்டிஸ் குறைபாட்டின் அறிகுறிகளை குணப்படுத்த உதவுகின்றன.

மஞ்சளில் காணப்படும் குர்குமின் முழங்கால் வலிக்கு சிகிச்சை அளிக்க உதவும்; இதில் முழங்காலில் ஏற்படும் தசைக்கூட்டு வலியும் அடங்கும்.

இயற்கையான நச்சுத்தடை/ காயங்களை குணமாக்கும்

மஞ்சள் ஒரு இயற்கை நச்சுத்தடை ஆகும்; இதில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் நோய்கள், காயங்கள் போன்றவற்றிற்கு எளிதில் சிகிச்சை அளிக்க உதவும்.

உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள் அல்லது தீக்காயங்கள் மீது மஞ்சளை தூவினால், அது கிருமிகளை அழித்து, தொற்று பரவுவதை தவிர்த்து, காயங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும்;

இருமல்

மஞ்சளை பொடி செய்து, அப்பொடி கலந்த பாலை குடிப்பது, இருமல் மற்றும் இதர சுவாச கோளாறுகளை குணப்படுத்த உதவும்.

எலிகளில் சிகரெட் புகையை சுவாசித்ததால் உண்டான நுரையீரல் அழற்சியை குறைக்க குர்குமின் உதவுகிறது. மேலும் எலிகளில், நுரையீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் அதன் ஆரோக்கியம் மேம்பட குர்குமின் உதவுகிறது. இதன் மூலம், குர்குமினால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது தெளிவாகிறது.

ஆஸ்துமாவினால் ஏற்படும் அழற்சி குறைபாடுகளை போக்க குர்குமின் உதவுகிறது. அழற்சி செல்கள் ஒன்றுகூடுவதை தடுத்து, அவற்றிற்கு சிகிச்சை அளிக்க குர்குமின் உதவுகிறது.

மஞ்சளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் வீக்கங்களை குறைக்க பெரிதும் உதவுகின்றன.