நாற்றாங்கால் பண்ணையினை பயன்படுத்தி அதிக மரங்களை வளர்க்க வேண்டும்

மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி

கிராம ஊராட்சிகளில் பசுமை ஏற்படுத்துதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொண்டார்.

கோவை காரமடை ஊராட்சி ஒன்றியம், கெம்மாரம்பாளையம் ஊராட்சியில்,  கிராம ஊராட்சிகளில் பசுமை ஏற்படுத்துதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இச்செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மேட்டுபாளையம் வட்டாட்சியர் சாந்தாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (காரமடை) சந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசுகையில், தமிழகத்தில் வனவளத்தினை அதிகரிக்கவும், உயிர்ப் பன்மையினைப் பாதுகாத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தின் இயற்கை வளத்தைப் பேணிப்பாதுகாக்க, ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. சூழலியல் சமன்பாட்டினை நிலைநிறுத்தவும், வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்குடன், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

அதனடிப்படையில், கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், கெம்மாரம்பாளையத்தில் கிராம ஊராட்சிகளில் பசுமை ஏற்படுத்துல் திட்டத்தின் கீழ் ரூ.4,90,000 மதிப்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் நாற்றாங்கால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். பூவரசு, சவுக்கு, சில்வர் ஒக், சிறு தேக்கு, மலைநெல்லி, எலுமிச்சை, கொய்யா, புங்கன், சீத்தாபழம், மாதுளை, மகாகனி, வில்வம், குமிழ், நந்திய வட்டம், தங்க அருளி, சிறிய நெல்லி, கற்பூரம், மேபிளவர், அரளி, செம்பருத்தி, மாங்கனி, பாதாம், ரோஜா உள்ளிட்ட பல செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இவை வீரிய ஒட்டு ரகங்கள் என்பதால் விரைவாக வளர்ந்து பலன் தருகின்றன. இப்பண்ணையில் தற்போது 20 ஆயிரம் மரக் கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளன.

இப்பண்ணைக்கு மேற்கூரை அமைக்கவும், மரக்கன்றுகளுக்கு தினசரி தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச தண்ணீர் தொட்டி அமைக்கவும்,முறையாக பராமரிக்கவும் தகுந்த பணியாளர்களை பணி அமர்த்தவும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகம், பள்ளி, வீடு உள்ளிட்ட இடங்களில் வளர்ப்பதற்கு தேவையான மரக்கன்றும் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு மரக்கன்று ரூ.25 முதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் பண்ணைகளிலும், வாரச் சந்தைகளிலும் விற்கப்படும் மரக்கன்றுகளை விட நாற்றங்கால் பண்ணையில் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து நாற்றாங்கால்களையும் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலப்பகுதிகளில் நடவு செய்ய உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்நாற்றாங்கால் பண்ணையினை பயன்படுத்தி மரக்கன்றுகளை பெற்று அதிக அளவிலான மரங்களை வளர்க்க முன்வர வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மரக்கன்றுகள் தேவைப்படுவோர் இந்நாற்றாங்கால் பண்ணையினை நேரடியாக அணுகி தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை  குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம். ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான மரக்கன்றுகளை நாற்றங்கால் பண்ணையில் குறைந்த விலையில் வாங்கி மக்களுக்கு வழங்கி மரங்களை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். மரங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுசூழலும், இயற்கை வளமும் பாதுகாக்கப்படும் என்றார்.