ஒரு ரூபாய் செலுத்தினால் ஒரு லிட்டர் குடிநீர் !

கோவை: மகளிர் சுய உதவி குழு மூலம், ஒரு லிட்டர் குடிநீர் ஒரு ரூபாய்க்கு விற்கும் திட்டத்தை, கோவை மாநகராட்சி துவக்கியுள்ளது. கோவை பழைய மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்த, குழாய் பதிக்கப்படுகிறது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, பொது குழாய்கள் அகற்றப்படும். அதற்கு முன், அனைத்து வார்டுகளிலும், தானியங்கி குடிநீர் மையம் திறக்கும் முயற்சியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழு மூலம், குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால், பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம். 200 ரூபாய் செலுத்தி, ‘ரீசார்ஜ்’ அட்டை பெற்றுக் கொண்டால், நாளொன்றுக்கு, 7 ரூபாய் செலுத்தி, 20 லிட்டர் கேன் நிரப்பிக் கொள்ளலாம். வீடு அல்லது கடைகளுக்கு நேரில் சென்று வினியோகிக்க, லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம், 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

விற்பனை ஜோர்

தற்போது வெயில் உக்கிரமாகி வருவதால், கேன் குடிநீர் விற்பனை அதிகரித்துள்ளது.

இம்மையம் மட்டும் நாளொன்றுக்கு, 150 கேன்களில் குடிநீர் சப்ளை செய்கிறது. ஒரு ரூபாய் நாணயம் செலுத்தி, ஏராளமானோர் குடிநீர் பெறுகின்றனர். அருகாமையில், இலவச குடிநீர் குழாய் இருக்கிறது; அதில், குடிநீர் வருவதில்லை. அதனால், ஒரு ரூபாய் செலுத்தி, தண்ணீர் பிடித்து தாகம் தணிக்கின்றனர்.

எல்லாத்துக்கும் கணக்கிருக்கு! மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒரு லிட்டருக்கு, 10 காசு, 20 லிட்டருக்கு ஒரு ரூபாய்; வீடு தேடிச் சென்று சப்ளை செய்வதற்கு, 2 ரூபாய் மாநகராட்சிக்கு, மகளிர் குழுவினர் கமிஷன் கொடுக்க வேண்டும். எவ்வளவு லிட்டர் தண்ணீர் விற்கப்பட்டு உள்ளது என்பதை அளக்க, மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது’ என்றார்.