தமிழோசை இதழ் வெளியீட்டு விழா

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கோவடிகள் தமிழ் மன்றத்தின் சார்பில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் தமிழோசை இதழ் வெளியீட்டு விழா என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் குப்புச்சாமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் தொடக்கவுரையாற்றிச் சிறப்பித்தார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையுரை வழங்கினார். அவர் தமது உரையில், மாணவர்கள் தமிழின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் மறவாமல் மொழியைக் கட்டிக் காத்தல் அவசியம் என்று வலியுறுத்தினார்.

டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் செல்வி பத்திரிகையாளர் சமஸ் குறித்த அறிமுகவுரையாற்றினார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பத்திரிகையாளர் சமஸ் தமிழோசை இதழை வெளியிட்டுத் ‘தமிழர் தலைமை’ என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அவர் தமது உரையில், சமகாலத்தில் நடப்பு உலகில் மொழியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். தமிழன மக்கள் தமிழ்ப் பாரம்பரியத்தின் வழி நடத்தல் அவசியம் என்றார். உலகின் தொன்மையும் பழமையும் பாரம்பரியம் மிகுந்த தேசம் இந்திய தேசம் என்றார். ஆனால் இன்னும் நம்மால் முழு வளர்ச்சியை ஏன் எட்ட இயலவில்லை என்ற காரணத்தை மாணவர்கள் மத்தியில் மிக அழுத்தமாகப் பதிவு செய்தார். தமிழின மக்களின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக இன்றும் மிக அழகாகவும் கம்பீரமாகவும் மிளிர்ந்து கொண்டிருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பையும் இராஜராஜனின் திறனையும் போற்றிப் புகழ்ந்துரைந்தார்.

டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி முதல் தமிழோசை இதழைப் பெற்றுக் கொண்டார். தமிழோசை இதழ் பதிப்பாசிரியர் ஜெயச்சந்திரன் நன்றியுரை வழங்கினார்.