தீத்திப்பாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வு

தீத்திப்பாளையத்தில் ரூ.2.90கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இச்செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சுதாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டத்தின் நகர்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் மழைநீர் வடிகால் அமைத்தல், சாலை வசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையத்தில் ரூ.51.98 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஊராட்சி வளமையம் பார்வையிடப்பட்டது.

மேலும், தீத்திப்பாளையம் ஊராட்சி,  காளம்பாளையத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்  பணியினையும், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில், கெம்பனூர் குட்டை ரூ.50 லட்சம் மதிப்பில் புணரமைக்கும் பணியினையும், ஆலாந்துறை பேரூராட்சி, மூங்கில் மடைகுட்டை, ஆலமரத்து பள்ளம், கொண்டது காளியம்மன் கோயில், வளையங்குட்டை, குறவன்காட்டுபள்ளம் ஆகிய பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலை தடுப்புசுவர் அமைக்கும் பணியினையும், மத்வராயபுரம் ஊராட்சி, தொம்பிலிபாளையம் பகுதியில் ரூ.3.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியினையும், தொண்டாமுத்தூர் ஊராட்சி, மத்வராயபுரத்தில், முட்டத்துராயர் கோயில் அருகில் ரூ.1.25கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியினையும் பார்வையிடப்பட்டது.

அரசு செயல்படுத்தும் வளர்ச்சித்திட்டப்பணிகள் உரிய முறையில் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்.