ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்” இசை நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் எனும் இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நடைபெற்றது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுப்பிர மேணியா இசைக் குழுவினர் தாங்கள் உருவாக்கிய இசைக் கோர்வைகளை இசைத்தனர்.

பிரபல இசைக்கலைஞர் எஸ்.சுப்ரமணியத்தின் புதல்வியான பாடகர் பிந்து சுப்பிரமணியம், புதல்வர் வயலின் இசைக்கலைஞர் அம்பி சுப்பிரமணியம், கர்நாடக இசை பாடகர் விவேக் சதாசிவம், கீ போர்டு கலைஞர் ஃப்ரிஜோ பிரான்சிஸ், தாள வாத்ய இசைக்கலைஞர் கார்த்திக் மணி ஆகியோர் இணைந்து இந்த இசைக் குழுவை உருவாக்கியுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் புகழ்மிக்க பல இசை அரங்குகளில் இந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

நிகழ்ச்சி ‘டேஸ் இன் த சன்’ பாடலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து எஸ்.சுப்ரமணியம் இசையமைத்த பாடல் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தில்லானா மற்றும் ராகப்பிரியா ராகத்தில் அமைந்த ஓம் தில்லைவாழ் நடராஜனே பாடல்.

மரபார்ந்த சாஸ்திரிய ராகங்களுடன் உலகின் பல்வேறு இசை வடிவங்கள் கலந்து புதிய அணுகுமுறையுடன் இசைக் கோர்வைகள் அரங்கில் இசைக்கப்பட்டன. இளமைத் துடிப்புடன் புதுமை வேகத்துடன் உலகின் இசை வடிவங்களோடு இந்திய இசை வடிவங்களை கோர்த்து அளித்தது சிறப்பாக அமைந்தது.

செவன் பீட் சைக்கிள் ஆல்பத்தில் இடம்பெற்ற செவன் ஸோனிக் எனும் இசைக்கோர்வையும் அதனைத்தொடர்ந்து டாக்டர்.எல். சுப்பிரமணியம் இசையமைத்த மோகன ராகத்தில் அமைந்த ஜர்னி பாடலும் நிகழ்த்தப்பட்டது. குறுக்கும் நெடுக்குமாய் கிழக்கும் மேற்குமாய் ரிதம்கள் கலந்து இசைமழை அரங்கில் பொழிந்தது.

கர்நாடக ராகத்துடன் லத்தீன் அமெரிக்க இசை வடிவங்களைக் கலந்து உருவாக்கப்பட்ட மீராஜ் இசைக்கோர்வை பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த இசைக் கோர்வை ஸ்பெயினின் புகழ்மிக்க பிளமிங்கோ இசைக்குழு உடன் சேர்த்து அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமையுடையது.

முற்றிலும் இசைக்கருவிகளை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட மிட்நைட் மியூசிக் கோர்வையும், நிகழ்வின் மையக் கருத்தை வலியுறுத்தும் மைத்ரீம் பஜத அகில பாடலும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

நிகழ்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்