பக்தி பாடலும், பாரதி பாடலும் சமமானவை

-‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்தா

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் எப்போ வருவாரோ நிகழ்வின் ஐந்தாவது நாளான ஜனவரி 5, ம் தேதி பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்தா சுவாமி ‘சுப்பிரமணிய பாரதியார்’ பற்றி உரையாற்றினார்.

இவர் பேசுகையில், சமஸ்கிருத மொழிக்கு மகாகவி காளிதாசன். அதுபோல தமிழ் மொழிக்கு மகாகவி பாரதியார். இன்று மனதிற்கு அமைதி தராத கல்விக்கு பல லட்சம் ரூபாயை பெற்றோர்கள் கொட்டி கொடுக்கின்றனர். பாரதியோ கனவுப் பள்ளியை மனதில் உருவகித்தவர். கல்வி மனதிற்கு அமைதி தரவேண்டுமென தனது சுயசரிதையில் அவர் குறிப்பிடுகிறார்.

மிகச் சிறந்த சக்தி உபாசகர் ஆக இருந்தவர் பாரதி. பல படைப்புகளில் தன்னை சக்திதாசன் என்று குறிப்பிடும் வழக்கம் அவருக்கு உண்டு. உடலைக் கட்டினால் உள்ளத்தைக் கட்டலாம். உள்ளத்தைக் கட்டினால் உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டினால் உலகையே ஆளலாம் என்று பாடியவர் பாரதி. சுயக் கட்டுபாட்டிற்குப் பெயர்தான் அறம். பிறர் துன்பத்தை தீர்ப்பதே பொருள். பிறர் நலம் வேண்டி பிரார்த்திப்பதே இன்பம். உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதலே வீடுபேறு என புது விளக்கம் தந்தார்.

ஞானத்தை வழி பட்டவன் பாரதி. சுப்பிரமணிய சிவா பத்திரிக்கை ஆரம்பிக்க பெயர் கேட்டபோது அதற்கு ஞானபானு என்று பெயரிட்டார். ஞானபானு என்றால் ஞானசூரியன் என்பது பொருள். பாரதியின் பக்தி பாடல்கள், தேச பக்தி பாடல்கள், குழந்தைப்பாடல்கள் புகழ்பெற்ற அளவிற்கு அவரது வேதாந்த பாடல்களை நாம் அதிகம் பொருள் கொண்டு அனுபவிக்கவில்லை. நாம் அன்றாடம் வீட்டில் பாடும் பக்திப் பாடல்களோடு சேர்ந்து ஒலிக்கவேண்டியது பாரதியின் பாடல்கள் என்றார் ஓங்காராநந்தா. மேலும் பாரதியின் வேதாந்த பாடலான ‘பரசிவ வெள்ளம்’ பாடலுக்கு விளக்கங்கள் சொன்னார். அவரோடு இணைந்து பார்வையாளர்களும் பாடலை கூட்டுவாசிப்பு செய்தனர்.

நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், ஆன்மீகப் பேச்சாளர் மரபின்மைந்தன் முத்தையா ஆகியோருடன் 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.