கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!

நம் நாட்டில் உள்ள கலாச்சாரம், பண்பாட்டைப் போற்றும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பகவான் கிருஷ்ணரின் அவதரித்தார். அதனால்தான் ஆவணி மாதம் அஷ்டமியை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து, அந்த நீலநிறக் கண்ணனை தங்களது வீட்டிற்கு அழைப்பர். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்திப்பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றுஇந்த கிருஷ்ண ஜெயந்தி.

இது ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் வட இந்தியாவில் ராசலீலா, தகி அண்டி என பல பெயர்களில், பலவிதமாக அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள் பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமாகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டைக¢கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறைவரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். இதனால் கிருஷ்ணன் தனது பிஞ்சுபாதங்களால் அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் வருவதாக ஐதீகம்.

பொதுவாக சிவராத்திரியானது சிவனுக்கு சிறப்பாகும், நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம், ராமநவமிராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வரஸ்வரூபமாக அவதரித்தவர்.மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகள் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபடுவர். இவ்வாறு கிருஷ்ணனை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிணிகளும் தீயினில் பட்டதூசாக அழியும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களுக்கு அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்கியம் மிக்க குழந்தை பாக்கியத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை நீங்கி நிவர்த்தியாகி குழந்தை பாக்கியம் பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

பெரும்பாலும் கிராமங்களில் கிருஷ்ணஜெயந்தி விழாவை வீர விளையாட்டாக கொண்டாடுகின்றனர். கிருஷ்ணர் கோயிலில், கிருஷ்ணர் பிறப்பன்று தூளி கட்டி, அதில் கிருஷ்ணர் உருவத்தை வைத்து தாலாட்டு பாடுவது பிரபலம். அதே போல், உறியடித்தலும், வழுக்குமரம் ஏறுதலும் இளைஞர்களின் வீரத்துக்கு உரமிடுவதாக இருக்கும். உறியில் பால், தயிர், பழங்களை கட்டி வைத்து கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர்கள் ஓடி வந்து தங்களிடம் உள்ள கோலால் அடிப்பதும், அவர்களை தடுக்க தண்ணீர் பீய்ச்சுவதும் கொண்டாட்டத்தின் உச்சம்.

வீரத்தை வெளிக்காட்ட வழுக்கு மரம் ஏறுவதில்  கிராமத்து இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பாக்குமரம் சீவப்பட்டு, ராகிகூழ், விளக்கெண்ணைய் போன்றவற்றை கலந்து தேய்க்கப்பட்டு வழுக்கு மரம் நடப்பட்டிருக்கும். மரத்தின் உச்சியில், வேட்டி முடிப்பில் பணம் கட்டப்பட்டிருக்கும்.

வழுக்கு மரம் ஏறுவோர் அந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதை எடுக்க சிறுவர்கள் போட்டி போடுவதும், மேலே வரை சென்று வழுக்கி கீழே வருவதுமாக விழா களைகட்டும். எனவே பக்தி மனம் கமழும் கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் ஆலிலைக் கண்ணனை வழிபட்டு, அவன் அருள் பெறுவோமாக!