அஜித்துக்கு பிடித்த ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட திறமை சாலிகளை நாம் பார்த்திருப்போம். சிலர் தன்னிடம் இருக்கும் திறமையை மிக அழகாக வெளிக்கொண்டு வருவார்கள். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அளவிற்கு திறமை கொட்டி கிடக்கும். ஹிந்திப் படங்களில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்ராஜ் சுப்ரமணியனை அவர் அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களைக் காண்போம்.

‘என்னுடைய சொந்த ஊர் பரமக்குடி. சிறு வயசுல சென்னைக்கு வந்துட்டோம். எனக்கு சின்ன வயசா இருக்கும் போதே சினிமா மற்றும் கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். என் பள்ளி படிப்பை முடிக்கும் தருணத்தில் என் நண்பன் ஸ்டில் கேமரா வைத்து இருந்தான். அதைப் பயன்படுத்த வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் அவன் அந்த ஸ்டில் கேமராவை பொத்தி பொத்தி பாதுகாத்து கொண்டு இருந்தான். அதன் மீதான ஆசையைப் புரிந்து கொண்ட எனது மாமா எனக்கு ஒரு ஸ்டில் கேமரா வாங்கிக் கொடுத்தார்.

அதன் பிறகு, பல கல்யாணங்களில் புகைப்படங்கள் எடுக்க தொடங்கினோம். அப்போது எங்க அப்பாவோட நண்பர் மூலமாக ஒளிப்பதிவாளர் ரங்கா அவர்களிடம்  உதவியாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். அதற்கு பிறகு ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி என்னை அழைத்து என் கூட சிறிது நாட்கள் பணியாற்ற அழைத்தார்கள். அப்பொழுது தொலைக்காட்சி ஒன்றில் ஆவணப்படங்களில் பணியாற்ற தொடங்கியவுடன் அங்கிருந்து டெல்லி, மும்பை செல்லும் சூழல் ஏற்பட்டது.

அங்குதான் பிரதீப்சர்க்கார், சுதீப் சர்க்கார், அனுரக் காஷ்யப் ஆகியோரின்  நட்பு கிடைக்க ஆரம்பித்தது. இந்திய சினிமாவைக் குறித்து நிறைய பேசும் தருவாய் ஏற்பட்டது. பிறகு ஹிந்தியில் தொடர்ந்து பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினேன்.

அத்துடன், தமிழுக்கு வந்து விஜய் சார் நடித்த ‘யூத்’ படத்தில் ஒளிப்பதிவு செய்தேன். அன்றிலிருந்து தமிழில்  நிறைய படங்கள் தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருக்கேன். இந்நிலையில் இயக்குநர் உதயபானு அவர்களின் நட்பு கிடைத்தது. அவர் இயக்கிய ‘நாளை’ படம் மூலமாக நடிகனாக அறிமுகம் ஆனேன். அதன் பிறகு யதார்த்தமான கதையம்சமுள்ள படங்களில் நடிக்கும் வாயப்பு கிடைத்தது. அது என்னை இன்னும் நடிப்பில் மெருகேற்ற உதவியாக இருந்தது என்று சொல்லலாம்.

என்னுடைய முதல் படம் ‘நாளை’ அஜித் சார் பார்த்தார். உடனே என்கிட்ட நீங்க தொடர்ந்து பல படங்கள் பண்ணனும் நட்ராஜ்னு சொல்லி என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தினார். அதனால் எனது தன்னம்பிக்கை இன்னும் அதிகமானது. நடிப்பு எனக்கு பிடிச்ச விஷயம். ஆனால் ஒளிப்பதிவாளருக்கு ஊடகங்களில் பல அங்கீகாரங்கள் கிடைக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை. கண்டிப்பாக எதிர்காலத்தில் அந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இன்னும் இரண்டு நாட்களில் சுதந்திர தின விழாவை நாம் கொண்டாடப் போகிறோம்.  நம் முன்னோர்கள் நமக்கு நல்ல நாட்டை அமைத்துக் கொடுத்துள்ளனர். அதை நாம் சரியாகபயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல படங்கள் வரும் போது உங்கள் ஆதரவு எங்களுக்கு கண்டிப்பாக தேவை. தற்போது ‘ரிச்சி’ படம் பண்ணி முடிச்சிருக்கேன். ரொம்ப அழகான கதாபாத்திரம். மக்கள் மனசுல ரொம்ப ஆழமாக பதியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கு. நம்ம எல்லாரும் சாதிக்க வந்துருக்கோம். அதை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும். வாழ்க பாரதம், விவசாய பூமி செழிக்கட்டும். தமிழ் வெல்லட்டும். ஜெய் ஹிந்த்…

—– பாண்டிய ராஜ்.