விதை பரிசோதனை நிலையத்திற்கு ஐரோப்பிய யூனியன் தணிக்கை குழு வருகை

விதை பரிசோதனை நிலையம், இந்தியாவிலேயே சர்வதேச விதை பரிசோதனை சங்கத்தால் அங்கீகாரம் பெற்ற அரசு சார்ந்த ஒரே பரிசோதனை நிலையமாகும்.

அத்தகைய பெருமை வாய்ந்த ஆய்வகத்திற்கு ஐரோப்பிய யூனியன் தணிக்கை குழுவினர் அண்மையில் வருகை புரிந்து ஆய்வக செயல்பாடுகளை கண்டறிந்தனர்.  அக்குழு சர்வதேச விதை வணிகத்தில் இந்தியாவின் பங்கினை அதிகரிக்க எத்தகைய வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பற்றி ஆய்வு செய்தனர்.  அதன் ஒரு பகுதியாக விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டனர்.

விதை ஏற்றுமதியில் விதையின் தரம் மிகவும் முக்கியம்.  அதன் அடிப்படையில் விதை பரிசோதனை நிலையத்தில் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகியவற்றின் பரிசோதனை முறைகளை பார்வையிட்டனர். மேலும் விதைகள் சேமிப்பு அறையில், ஆய்வுக்குப் பின்னரும் குறிப்பிட்ட நாட்கள் வரை விதைகள் அவற்றின் பண்புகள் மாறாமல் பாதுகாத்தலையும் பார்வையிட்டு பாராட்டினர்.

சர்வதேச அளவில் விதை பரிசோதனையின் விதிமுறைகள் மற்றும் செயல்முறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்தனர். அப்போது இயக்குநர், விதை சான்றளிப்புத்துறை மற்றும் அங்ககச்சான்றுத்துறை, விதை ஆய்வு இணை இயக்குநர், விதைச்சான்று இணை இயக்குநர், விதைச்சான்று உதவி இயக்குநர், விதை பரிசோதனை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர்களும் உடன் இருந்தனர்.