கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு குறித்து பயணம்

கோவை, சூலூர் வாரச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைத்தின் செயல்பாடு குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இச்செய்தியாளர் பயணத்தின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)துவாரகநாத்சிங், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்(நீர்வள ஆதாரத்துறை) ஜெயபிரகாஷ்,  செயல்அலுவலர் (சூலூர்) ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, வட்டாட்சியர்(சூலூர்) மீனாகுமாரி,  சூலூர் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் மன்னவன்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கோவை மாவட்ட நிர்வாகம், தன்னிச்சையாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் குளங்கள் பாதுகாப்பு, மறு சீரமைப்பு மற்றும் குளக்கரையில் மரங்கள் நடுதல் என சூழலியல் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சூலூர் சின்னகுளத்தில் அதனை சுற்றிவுள்ள பகுதியிலிருந்து சேகரமாகும் கழிவு நீரானது வாரச்சந்தை வாளகத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு ஆக்ஜிஜனேற்றம் செய்யப்பட்டு மீண்டும் சுத்தம் செய்யப்பட்ட நீராக குளத்தில் விடப்படுகிறது இதனால் இயற்க்கை சூழல் சமச்சீர் நிலை மேலோங்கி காணப்படுகின்றது. ரூ.42 லட்சம் மதிப்பில் இச்சுத்திகரிப்பு நிலைய சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இச்சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் சூரிய சக்தி மின்சாரம் மூலம் இயங்குகின்றது. இதில் இரண்டு ஆக்ஜிஜனேற்ற கருவிகள் தொடர்ந்து 24மணிநேரம் செயல்பட்டு,  சல்பர் உள்ளிட்ட வேதி மூலக்கூறுகள் அடங்கிய கழிவு நீரை அதிகளவில் ஆக்ஜிஜனேற்றம் செய்யப்பட்ட நீராக மாற்றுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 60000 லிட்டர் நீர் வெளியேற்றப்படுகிறது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் பரிந்துரைக்கும் அளவிலான BOD, COD  அளவில் உள்ளவாறு சாக்கடைநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்நீர் குடிப்பது தவிர மற்ற எல்லா உபயோகத்திற்குமான நீராக மாறுகிறது. இதனால் நிலத்தடி நீரின் தன்மையும் வெகுவாக மேம்படும். குளத்தை சார்ந்துள்ள 500 ஏக்கரில் உள்ள 150 கிணறுகளின் நீரும் நல்ல நீராக பயன்பாட்டிற்கு உகந்ததாக மாறும், என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.