தமிழகத்தில் தொழிற் பூங்கா… விரைவில்!

துபாயில் உள்ள தொழிலதிபர்களைக் கொண்டு தமிழகத்தில் தொழிற் பூங்கா அமைப்பது குறித்தும், 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழில் தொடங்குவது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, துபாய் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம், துபாய் சென்றிருந்த தமிழக முதல்வர், அந்நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க, 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் துபாய் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள், என்ன மாதிரியான தொழில்கள் தொடங்கலாம், எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம், எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பனவற்றைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சந்திப்புக்கு பின்னர், துபாய் முதலீட்டாளர்களின் குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபிரியா பேசுகையில், பயோடீசல், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி, வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சருடன் ஆலோசித்ததாக தெரிவித்தார். அடுத்த 3 மாதங்களில் நிலங்கள் கண்டறியப்பட்டு, 6 மாதங்களுக்குள் தொழில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.