பூமி தாங்குமோ என்னவோ,  நாம் தாங்க மாட்டோம்!

ஒரு காலத்தில் கோயம்புத்தூர் நகரத்தில் போர்வெல் கிணறு தோண்டப் போகிறார்கள் என்றால் பலரும் வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு சிறுவர்கள் கூட்டமே அதை பார்ப்பதற்காக காத்திருக்கும். அவ்வளவு அபூர்வம். ஆனால் இன்று கோவை நகரத்தில் தெருவுக்கு தெரு போர்வெல் லாரிகள் நின்று கொண்டிருக்கின்றன. புதிதாக போர் போடுபவர்கள், ஏற்கனவே உள்ள போர் வெல் கிணற்றை ஆழப்படுத்துபவர்கள் என்று போர்வெல் லாரிகளுக்கு தற்போது பெரிய டிமாண்ட் ஆகி விட்டது.

கோவை நகரப்பகுதிகளில் சிறுவாணி தண்ணீர் அல்லது போர்வெல் தண்ணீர் என்று தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்த நிலை இன்று முற்றிலும் மாறி விட்டது. தண்ணீருக்கு சிக்கல் இல்லாமல் மிதப்பாக திரிந்தக் காலம் போய் இன்று காலி குடங்களுடன் மக்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று போர்வெல் பலரின் குலதெய்வமாக மாறிவிட்டது. ஏனென்றால் சிறுவாணி தண்ணீர் தேவையான அளவு கிடைப்பதில்லை. லாரிகளில் விற்கப்படும் குடிநீர் லிட்டர் இவ்வளவு ரூபாய் என்று விற்கிறார்கள். உப்புத்தண்ணீர் எனப்படும் ஆழ்துளை கிணறுகளில் எடுக்கப்படும் லாரி தண்ணீர் விலை ஷேர் மார்க்கெட் போல ஏறிக்கொண்டே போகிறது.  அது போக அந்த லாரி தண்ணீர் வந்து சேர்வதற்கும் காத்திருக்க வேண்டி இருக்கிறது. எனவே பலர் கடனை வாங்கியாவது சொந்தமாக போர்வெல் போடுவது என்று முடிவு செய்கிறார்கள். அதன் விளைவுதான் இன்று தெருவுக்கு தெரு போர்வெல் லாரிகள் நிற்கின்றன.

இது மிகவும் ஒரு கெட்ட சகுனம். நீர் என்பது வாழ்வின் அடிப்படை ஆதாரம். அது இல்லாவிட்டால் மனிதன் மட்டுமல்ல, எந்த உயிர்களுமே இருக்க முடியாது. ஆனால் இதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல், நாம் பிக்பாஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது ஏதோ மாநகராட்சி போன்ற உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அவர்கள் தண்ணீரை உற்பத்தி செய்யவில்லை; விநியோகம் செய்கிறார்கள். அவ்வளவுதான். பூமியில் நீர் இல்லை என்றால் அவர்கள் கையை விரித்து விடுவார்கள். அதுதான் போர் வெல் இருக்கிறதே என்று அலட்சியமாக நினைத்தால் நமக்கு சரியான தண்டனை காத்திருக்கிறது.

தொண்டாமுத்தூர் போன்ற மலை அடிவாரப் பகுதிகளில் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகம் போனால் ஐம்பது அடி ஆழத்தில் நிலத்தடி தண்ணீர் இருந்தது. ஆனால் இன்ற சில இடங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் அடி வரை நிலத்தடி நீர் மட்டம் சரிந்து விட்டது. இன்று கிணற்றை ஆழப்படுத்துவதற்கு, மீண்டும் போர் போட்டு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் குடும்பங்கள் என்ற ஒரு பட்டியல் தயாராகி வருகிறது.

நொய்யலாறு உருவாகும் பகுதியிலேயே இந்த நிலை என்றால் கோவை நகரத்தில் சொல்லவே வேண்டியதில்லை. இப்பகுதியில் எத்தனை ஆயிரம் போர் வெல் கிணறுகள் உள்ளன என்ற கணக்கு யாருக்கும் தெரியாது.  எத்தனை லட்சம் லிட்டர் நீரை பூமியிலிருந்து எடுக்கிறோம் என்ற வரைமுறையின்றி உறிஞ்சித் தள்ளிக்கொண்டு இருக்கிறோம். இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. என்றாலும் கிடைத்த வரை லாபம் என்று தினந்தோறும் புதிய புதிய போர் வெல்கள் போட்டுக் கொண்டே இருக்கிறோம். இது பற்றி தனிமனிதர்களோ, அரசுத் துறைகளோ உண்மையான அக்கறை கொண்டிருப்பதாக தெரியவில்லை. எல்லோருக்கும் இதுபற்றி தெரிந்திருந்தும் ஏனோ ஒரு கள்ள மௌனம் காக்கிறோம்.

இந்த ஊர் வளர்ந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இங்கு கிடைத்து வந்த நீர் என்பதை மறந்து விடக்கூடாது. எல்லாவற்றையும் விட நமக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதாரமாக இருந்து நீரைத்தந்து வந்த பூமிக்கு திருப்பி நாம் என்ன செய்திருக்கிறோம்? இயற்கை நம்மிடம் எதுவும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் அது மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு தர வேண்டாமா? கிடைத்த இடத்தில் எல்லாம் ஊசி குத்துவது போல பூமியெங்கும் போர்வெல் போடுவதுதான் அறிவுடைய மனித சமூகம் செய்யும் வேலையா?

இரண்டு ஆண்டுகளாக வான் மழை பொய்த்துவிட்டது. இன்னும் ஓர் ஆண்டு இந்த நிலை நீடித்தால் நமது சாயம் வெளுத்துவிடும். குடிக்க, குளிக்க, மற்ற தேவைகளுக்கே நீர் கிடைக்காத போது விவசாயம் போன்றவை எப்படி நடக்கும்? இப்போது நாம் சரியாக சிந்தித்து செயல்பட வில்லை என்றால் நம் காலத்திலேயே அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டிவந்து விடும். நமது எதிர்கால சந்ததிகளுக்கு பாங்க் பாலன்ஸ் பணம் மட்டும் போதாது. இன்ஜினியரிங் படிக்க வைத்தால் போதாது; வீடு கட்டி வைத்தால் போதாது. அடிப்படையாக குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் வேண்டும்.

ஊர் கூடி தேர் இழுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதைத்தான் தெருவுக்கு தெரு எமனின் எருமை நமக்கு வாகனம் போல நின்று கொண்டிருக்கும் போர் வெல் லாரிகள் காட்டுகின்றன.

நமது சமூகத்தில் அடிப்படை பிரச்சினையான இந்த தண்ணீர் பிரச்சனை குறித்து ஒரு பெரிய ஆரோக்கியமான விவாதம் ஒன்று நடைபெற வேண்டும். இன, மொழி, மத, அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவருக்குமாக ஒரு பொதுவான தீர்வு கண்டறியப்பட வேண்டும். முட்டாள்கள் ஓரங்கட்டப்படடு உண்மையிலேயே தீர்வு காண்பவர்களுக்கு மதிப்பும் இடமும் தந்து இந்த சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்.

பூமிக்கடியில் இருக்கும் தண்ணீர் எல்லோருக்கும் சொந்தம்; ஆனால் நான் மட்டும் எவ்வளவு போர் வேண்டுமானாலும் போடுவேன் என்று அறியாமல் பேசுவோர்கள் ஒதுக்கப்பட வேண்டும். இது வரை எவ்வளவு போர் வெல்கள் இங்கு உள்ளன, தினந்தோறும் எவ்வளவு நீர் பூமியிலிருந்து உறிஞ்சப்படுகிறது, அதை பயன்படுத்திய பிறகு திரும்பவும் பூமிக்குள் செலுத்துவது எப்படி, மழை நீரைச் சேமிப்பது எப்படி என்பவை குறித்து மனம் திறந்து யோசித்து செயல்படவேண்டும்.

தண்ணீர் பயன்பாட்டு முறைகள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். ஒரு காலத்தில் குடிக்க, மற்றும் அன்றாடம் சில பணிகளுக்கு மட்டும் தண்ணீர் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது.

ஆனால் தற்போது விவசாயம், தொழிற்சாலை, ஓட்டல், மருத்துவமனை ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீரை எந்தவித வெட்கமும் இல்லாமல், பொறுப்பும் இல்லால் செலவு செய்து வருகிறோம். இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இது குறித்த தகுதியான வல்லுநர் களைக்கொண்டு திட்டங்களை கொண்டுவர வேண்டும். வேண்டுமானால் முன்பு கொண்டு வரப்பட்டது போல மழை நீர் சேகரிப்பு அமைப்பு இல்லாத இடங்களில் தண்ணீர், மின் இணைப்பு துண்டிப்பு போன்ற சட்டங்களையும் கொண்டு வரலாம்.

சிலர் வார்த்தையில் திருந்துவார்கள்; சிலர் சாட்டையைச் சுழற்றினால்தான் திருந்துவார்கள். வார்த்தையா, சாட்டையா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் இன்னும் ஓராண்டுக்கு மழை பெய்யாமல் இந்த நிலை நீடித்தால் பூமி தாங்குமோ என்னவோ, நாம் நிச்சயம் நிலைகுலைந்து போவோம். வருமுன் காப்போம்.