கல்வியுடன் பிறத்துறை அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

– அருண் நல்ல பழனிசாமி

கே.எம்.சி.எச் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ், கே.எம்.சி.எச். நர்சிங் கல்லூரி, கே.எம்.சி.எச். பார்மசி கல்லூரி, கே.எம்.சி.எச். பிசியோதெரபி கல்லூரி, கே.எம்.சி.எச். தொழில்சார் சிகிச்சை கல்லூரி, கே.எம்.சி.எச் இன்ஸ்டியூட் ஆப் அலையட் ஹெல்த் சயின்சஸ் ஆகிய கல்லூரிகளின்  முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா  நடைபெற்றது.

இதில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் நல்ல பழனிசாமி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

கோவை மருத்துவ மைய கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி புவனேஸ்வரன், அவர்கள் தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், புதிதாக கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்குத் தமது வாழ்த்துக்களைக் கூறி, நல்லொழுக்கம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான தங்கள் இலக்கை அடைய மாணவர்களை விடாமுயற்சியுடன் பணியாற்ற ஊக்குவித்தனர்.  மேலும் கல்லூரி வகுத்த விதிமுறைகளை கடைபிடிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் நல்ல பழனிசாமி அவர்கள் விழாப் பேருரையாற்றினார். இவர் பேசுகையில், மாணவர்கள் கல்வி கற்கும் பொழுது, அதனுடன் பிற துறை அறிவையும் வளர்த்துக் கொண்டு தம்மை முன்னேற்றிக் கொள்ள அயராது பாடுபட வேண்டும் என்றார். மாணவர்கள் மருத்துவம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்களை கல்லூரிப் பருவத்திலேயே கற்றுத் தெளிதல் அவசியம் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் தங்களது பணியை நேசித்துச் செய்தால் மட்டுமே தம்முடைய வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று கூறினார். மாணவர்கள் கல்வி கற்று வெளிவந்து, வாழ்வில் தமது சேவையைச் செவ்வனே செய்து வருவது பாராட்டிற்குரியதாகும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச். உடல் நல கல்வி நிறுவனங்களின் நர்சிங் கல்லூரி  முதல்வர் மாதவி, பார்மசி கல்லூரி முதல்வர் ராஜகேகரன், பிசியோதெரபி கல்லூரி முதல்வர் எட்மண்ட் எம். டி’கோடோ, தொழில்சார் சிகிச்சை கல்லூரி முதல்வர் சுஜாதா மிசல், அலையட் ஹெல்த் சயின்சஸ் இயக்குனர் சுஜீதா சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக பேராசிரியர் பிரவின், நன்றியுரை வழங்கினார்.