அமேசான் காட்டுத் தீயை அணைத்த இயற்கை மழை !

உலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகியது. இந்த நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில், பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் சகிதம் கடந்த சில நாட்களாக பெரும் முயற்சி செய்தனர். மேலும் ஹெலிகாப்டர் மற்றும் இராணுவத்திற்கு சொந்தமான விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சிகள் செய்யப்பட்டது.

ஆனால், அமேசான் காட்டில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு தீ பரவியதால் தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலான விஷயமாக இருந்தது. அமேசான் காட்டில் இருந்த பல அரிய மரங்கள் மற்றும் உயிரினங்கள் தங்கள் கண்முன்னே தீயில் கருகியதை தீயணைப்பு வீரர்களுக்கு சோகத்தை தந்தது.

இந்த நிலையில் மனிதர்களால் அணைக்க முடியாத தீயை, அணைக்கும் விதமாக மழை பெய்ய வேண்டும் என பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. இந்த பிரார்த்தனை பலிக்கும் வகையில் நேற்று அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டு, இதமான சூழல் நிலவியது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.