நின்ற கோலத்தில் அத்திவரதர் – ஆகஸ்ட் 1

காஞ்சிபுரம்: அத்தி வரதர் உற்சவத்தின் முப்பதாம் நாளான இன்று, ராமர் நீலநிறப் பட்டு அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். அதிகாலை முதலே பக்தர்கள், வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பார் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் ஜூலை 31-ம் தேதியான நாளை பொது தரிசனத்தில் நுழைவுவாயில் நண்பகல் 12 மணி அளவில் மூடப்படும். அதன்பின்னர் கோயில் வளாகத்திற்குள் இருக்கக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் விஐபி வரிசையில் வரக்கூடிய பக்தர்கள் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்து அறநிலையத் துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய ஆன்லைன் பாஸ் வைத்திருப்பவர்கள் நண்பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கம் போல் காலை 5 மணியிலிருந்து அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.