கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2019

பொங்கலோ, தீபாவளியோ, கோவில் திருவிழாவோ, எதுவென்றாலும் திருவிழா, திருவிழா தான். கூட்டம், கூட்டமாய் மக்கள். மனதிலும், முகத்திலும் மகிழ்ச்சி, ஆங்காங்கே பல்வேறு நிகழ்ச்சிகள் என்று திருவிழா களைகட்டும்.

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவும் அப்படித்தான். கொடிசியா நடத்தும் திருவிழாவாகவே அமைந்திருந்தது. சில நூறு புத்தகக் கடைகள் கொண்ட பத்து நாள் நடக்கும் புத்தகத் சந்தைதான் என்றாலும் தினந்தோறும் இலக்கிய நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், சொற்பொழிவுகள், மாலை நேர நிகழ்ச்சிகள் என களைகட்டி இருந்தது. அதுவும் பொதுமக்கள் கூடிய மாலைநேர நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தது. ஜீலை 19 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த விழா கோயம்புத்தூரின் அறிவார்ந்த முகத்தை எடுத்துக் காட்டியது.

மாபெரும் நதியொன்று, சிறு ஊற்றாக புறப்படுவதுபோல, தொடக்க விழாவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எளிமையாகத் தொடங்கி வைத்தார். அவரே ஒரு தேர்ந்த வாசகர் என்பதால், மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளை இந்த புத்தகத் திருவிழாவுக்கான ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி இருந்தார். அது நல்ல பயனையும் தந்தது. முதன்முறையாக நகரப் பேருந்துகள் “கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா” போஸ்டர்களுடன் ஊரெங்கும் வலம் வந்தன.

இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான “வாழ்நாள் சாதனையாளர் விருது” இந்த முறை எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தின் மூத்த படைப்பாளியான அவரை வாழ்த்தி, அவரை நன்கு அறிந்த, நண்பரும் கவிஞருமான கலாப்ரியா பேசினார். இதற்காகவே வந்திருந்தார், இன்னொரு எழுத்துலக ஆளுமையான வண்ணதாசன். வாழ்க்கையில் நடப்பதைத்தான், காண்பதைத்தான் எழுத்தில் வடிக்கிறோம் என்று ஏற்புரையில் வண்ணநிலவன் அடக்கமாகக் கூறினார்.

இந்த ஆண்டு முதன்முறையாக இளம்படைப்பாளர்களுக்கு புனைவு, புனைவு சாரா இலக்கியம், கவிதை என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. குணா கந்தசாமி, ஞா.குருசாமி, சோலை மாயவன் ஆகியோர் விருது பெற்றனர். அடுத்த நாளே அவர்களின் படைப்புகள் குறித்து திறனாய்வு செய்வதற்கான ஒரு அமர்வும் நடைபெற்றது.

அறிவுக்கேணி நிகழ்ச்சிகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் ஒரு அங்கமாக இந்த அறிவுக்கேணி நிகழ்வுகள் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதன் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, நாடகம், சிறுகதை மற்றும் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்துப் போட்டிகளுமே புத்தகம், வாசிப்பு என்ற கருத்துகளை மையமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள்

இந்த ஆண்டு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக மூன்று பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. முதலாவது, 3,500 மாணவர்கள் பங்கு பெற்ற கட்டுரைப் போட்டி. கோவை மாவட்ட ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து கொடிசியா இதனை சிறப்பாக நடத்தியது. ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழுடன், இருநூறு ரூபாய்க்கான பரிசுக் கூப்பன் புத்தகம் வாங்குவதற்கு வழங்கப்பட்டது. முதல் மூன்று பரிசுகளுக்கு ரொக்கத் தொகை வழங்கப்பட்டது.

அடுத்ததாக, நூறு அரசுப்பணி நூலகங்களுக்கு ரோட்டரி சங்கங்கள் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்ததுபோல “Let us Make Engineering Simple” எனும் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்து நூறு பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அறிவியல் செய்முறை நிகழ்ச்சிகளை நேரில் கண்டறிந்தனர். பொதுமக்களைக்  கவர்ந்திழுக்கும் விதமாக நாள்தோறும் மாலை நேர நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மூன்று சொற்பொழுவுகள், ஒரு நாடகம், ஒரு இசை நிகழ்ச்சி என்று மாலை நேரங்கள் களைகட்டி இருந்தன.

‘காந்தியம், ஓர் அற்புதமான வாழ்வியல் முறை’ எனும் தலைப்பில் தமிழருவி மணியன் ஒரு நாளும், ‘நீ நான் நிஜம்’ என்ற தலைப்பில் சுகிசிவம் ஒரு நாளும், மும்பை நகரின் புகழ்பெற்ற “டப்பாவாலா” குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரித்தேஷ் ஆண்ட்ரே ஒரு நாளும் என மாலைப் பொழுதுகள் பயனுடன் கழிந்தன. இசைக்கவி ரமணன் “பாரதியாராக” வாழ்ந்து காட்டிய “பாரதி யார்?” எனும் நவீன நாடகம் அனைவரின் மனதையும் கவர்ந்தது. அதன் ஒலி, ஒளி அமைப்பு, நடிகர்களின் பங்களிப்பு, குறிப்பாக பாரதியாக நடித்த ரமணன் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன.

அதைப்போலவே கவியரசு கண்ணதாசன் பாடல்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய தேர்ந்தெடுத்த பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சியும் ஒரு நாள் நடைபெற்றது.

இலக்கியம் சார்ந்த இரு நிகழ்வுகளாக நூல் வெளியீட்டு விழா, பெண் கவிஞர் கவியரங்கம் ஆகியனவும் நடைபெற்றன. எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய “ஒரு கூடைத் தாழம்பூ” நூலும், மகுடேசுவரன் எழுதிய “நிகழ்பாடு” நூலும், வேணுகோபால் எழுதிய “கவிதைத் திறனாய்வு வரலாறு” நூலும் புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டன. அறுபதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் பங்குபெற்று கவிதை வாசித்த “பெண்பா” எனும் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் அகிலா இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். தொழில் நகரமான கோவையில் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவில் தொழிலாளர்களுக்கென சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. பல்வேறு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றன. கலைமாமணி கு.ஞானசம்பந்தன் பங்கேற்ற பட்டிமன்றமும் நடைபெற்றது. இந்த தொழிலாளர் நிகழ்வுகளை சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நெறிப்படுத்தி வழங்கினார். மொத்தத்தில், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2019 நடைபெற்ற பத்து நாட்களும் முத்தான நாட்களாகவே அமைந்தது என்றால் மிகையாகாது.