கொங்குநாடு கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொங்குநாடு களை அறிவியல் கல்லூரி வளாகத்தில் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூழலியல் வல்லுநர் எம்.குணசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், “இன்றைக்கு அதிக அளவில் காற்று மாசுபட்டு வருவதற்கான காரணங்களையும் காற்று மாசுபாட்டை குறைக்க நாட்டு மரங்கள் பயன்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். காற்று மாசுபாட்டால் பறவைகள் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் அதனை களைவதற்கான வழிமுறைகளையும்” எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் சி.ஏ.வாசுகி அவர்கள் கலந்துகொண்டு மாசுபாடு மிகுந்த நச்சுத்தன்மை அடையும் போது அதனை தடுத்தல் மற்றும் குறைப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் எம். லட்சுமணசாமி அவர்கள் காற்று மாசுபாடு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைப்பது ஆசிரியர்களின் கடமை என்று குறிப்பிட்டார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பின் உறுப்பினர் பிரியா அவர்கள் பேசும் போது, ஆண்டுதோறும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சேர்கின்ற முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வளர்க்க கல்லூரி துணை நிற்பதாகவும் தெரிவித்தார். விழாவின் நிறைவில் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜா அவர்கள் காற்று மாசுபாட்டால் பருவநிலை மாற்றம் நிகழ்வதை எடுத்துரைத்து விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.