ஆனந்த யாழை மீட்டுகிறாய்…

 நா.முத்துக்குமார் என்ற… தேசிய கவிஞனுக்கு கவிதாஞ்சலி!

நம்பமுடியவில்லை…! வயது – 41!

உன் மரணம் தமிழனுக்கு இழப்பு!

கோடம்பாக்கத்துக்கு நிரப்ப முடியாத பேரிழப்பு!

 

இலக்கியத் தமிழை…

இலக்கண வரிகளாய் தந்தவன் நீ!

தமிழை நீ கருவாடு ஆக்காமல்…

ஆலயத்து கற்பூரம் ஆக்கியவன்!

கூர்மையான அறிவும்… நேர்மையான பேனாவும்

கொண்ட முத்தான கவிஞன் நீ!

குத்துப்பாட்டு கேட்டால் முடியாதென்பாய்

நல்முத்துப் பாட்டு கேட்டால்…

அது உன் மூளைக்கு விருந்தென்பாய்!

இளம் வயதிலே மூவாயிரம் திரைப்பாடல்

தொட்டவன் நீ…!

முடியுமா இனி ஒருவரால்?

இரண்டு முறை இந்தியாவையே

உன் பக்கம் திரும்ப செய்து

தேசிய விருது பெற்றவன் நீ!

“ஆனந்த யாழை” நீ மீட்டி…

எங்களை ஏன்

சோக யாழை பாட வைத்தாய்?

வெயிலை கூட அளவுக்கு அதிகமாக

ரசித்த கவிஞன் நீயாகத்தான் இருப்பாய்!

வெயிலோடு விளையாடி…

சுடும் வெயிலும் அழகென்றாய்!

தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகுமென

தந்தையின் பெருமையை உயர்த்தியன் நீ!

இளம் வயதிலே சிகரம் தொட்டாய்!

சிறு குழந்தையின் உதடுகளில் கூட

உன் திரைப்பாடலின் வரிகள்

சிறப்பாக உட்காரும்! இனிதே உச்சரிக்கப்படும்!

காம வரிகளை புறந்தள்ளியவன் நீ!

இன்னும் உனது 15௦ திரைப்பாடல்கள்

வெளியாக உள்ளதாம்!

அதில் இன்னும் எத்தனை பாடல்கள்

தேசிய விருது தொடுமென…

உன் ஆன்மாவுக்கு மட்டுமே தெரியும்!

புலமையும்…வறுமையும்…அந்தக்காலம்

புலமையும் வசதியும் இந்தக்காலம்!

இது பொய் கலக்காத நிஜமுங்கூட!

ஆம்… உன் அறிவான திறமையால்

வசதியும்… வாய்ப்பும்…

உன் வீட்டு முன்பக்கம் கதவை தட்டியது!

ஆனால் … உன் தனிப்பட்ட தன்னலமோ

உன்னை உன்வீட்டு கொல்லப்புற வழியில்

ஏன் கூட்டிச் சென்றது?

எல்லாம் அழகே என்றாய்

ஆம் … உன் மரணம் கூட அழகென

சொல்லாமல் சொல்லி சென்றுவிட்டாய்!

தமிழர்களே…கவிஞர்களே … படைப்பாளிகளே

கல்லீரலை  காவு வாங்கிய மரணம்

இதுவே கடைசியாக இருக்கட்டும்!

மனிதன் என்பவன் பிறந்து இருக்கிறான்

ஆனால் … கவிஞனோ இறந்து பிறக்கிறான்!

முத்துக்குமாரே  நீ இறக்கவில்லை…

இத்தமிழ்  மண்ணில் விதைக்கப்பட்டுள்ளாய்!

மீண்டும்… உன் அன்புமகன்  ஆதவன் மூலம்

சீக்கிரமே  கவிஞனாய் மறுபிறப்பெடுப்பாய்!!

தமிழ் நேசத்துடன்…,

 

அரிமா ஹால்ஸ் நாராயணன்

எழுத்தாளர் – செட்டிநாடு கூத்து பட்டறை

அலைபேசி: 9677345363.