நன்னெறிக் கழகத்தின் 67-ஆம் ஆண்டு விழா

கோவை நன்னெறிக் கழகத்தின் 67-ஆம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா ரேஸ் கோர்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெற்றது.

நிகழ்விற்குத் தொழிலதிபர் இயகோகா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் நன்நெறிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நன்னெறி கழகத்தின் பணியாகும். தொழிலாதிப்பாராகவும், பேச்சாளர்களாகவும் இருந்து மக்களின் நன்மைக்காகச் செயலாற்றும் நற்குணம் கோவை மக்களிடம் உள்ளது. அவ்வகையில் கோவைக்கு ஈடான நகரம் எதுவும் இல்லை. தமிழ் மண்ணின் சிறப்பு ஆன்மீகம் தான் என்றார்.

அதனைத் தொடர்ந்து, விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் “தமிழ் நெறிச்செம்மல்” விருதினை சிதம்பரநாதனிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வழங்கினார்.

மேலும், “நூல் நெறிச்செம்மல்” விருத்தினை விஜயா வேலாயுதமிற்கு எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா வழங்கினார்.

தொடர்ந்து எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில் பதிப்புலகத்தின் பீஷ்மராக வேலாயுதம் இருக்கிறார்.

புது கவிதை கவியரங்கின் சாதனையாளர் சிதம்பரநாதன். படிப்பு துறையிலும், படைப்பு துறையிலும் அடையாளத்தை உருவாக்கியவர்களாக இவர்கள் விளங்குகின்றனர் என்றார்.

இதையடுத்து, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகையில், எழுத்தாளர்களை மதிப்பவர் வேலாயுதம். அறிவிக்கப்படாத பல்கலைக்கழகமாக விஜயா பதிப்பகம் இருக்கிறது.

மேலும்,கம்பராமாயணம், தொல்காப்பியம் குறித்த பெருமைகளையும் எடுத்துரைத்தார்.

இறுதியில் கவிஞர் சிதம்பரநாதன் மற்றும் விஜயா வேலாயுதம் ஆகியோர் விருது ஏற்புரை வழங்கினர்.