கோவை அரசு மருத்துவமனை சார்பில் நடமாடும் மருத்துவம் முகாம்

கோவை அரசு மருத்துவமனை சார்பில், பருவகால மாற்றத்தால் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனரின் அறிவுறுத்தலின்படி, மாநிலம் முழுவதும் பருவமழை மற்றும் கனமழையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பருவமழை தொடர்பான நோய்களுக்கான (வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மஞ்சள் காமாலை, காயம், பாம்பு கடி, நாய் கடி மற்றும் பிற சிறு வியாதிகள்) முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் பருவமழை தொடர்பான நோய்களுக்கு ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் விநியோகம், நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரை வழங்கப்படும்.

மருத்துவக் குழுவில் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள், மருத்துவ பூச்சியியல் நிபுணர், செவிலியர்கள், முதுகலை பட்டதாரி மற்றும் பயிற்சி மாணவர்கள், மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் உள்ளனர்.

இந்த நடமாடும் மருத்துவ முகாம் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்கள் மற்றும் ஊரகப் பகுதிகள் அனைத்திற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலுக்கு உரிய மருந்து, ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். தீவிர நோயாளிகள் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள்.

அந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளரின் உதவியுடன் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தினமும் 25 முகாம்கள் மற்றும் தண்ணீரில் குளோரின் அளவு ஆகியவற்றின் தினசரி புள்ளி விவரங்கள் மருத்துவக்கல்வி இயக்குநர்க்கு அனுப்பப்படும்.

கோவை மருத்துவக் மருத்துவமனையின் டீன் நிர்மலா, மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் சடகோபன், உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடிச்செல்வன், சமூக மருத்துவ துறை பேராசிரியர் காளிதாஸ் ஆகியோர் முகாமை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்துள்ளனர்.

இந்த முகாமானது உக்கடம், கரும்புக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஆரமிக்கப்பட்டுள்ளது.