உலக ஆராய்ச்சியாளர்களின் பட்டியல்: கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரன் சிறப்பிடம்

உலக அளவில் மிகவும் பிரபலமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் நிறுவனமான எல்சேவியர் அதிக கட்டுரைகளை எழுதிய ஆராய்ச்சியாளர்களை சிறப்பிக்கும் வகையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தத் தரவரிசை பட்டியலில் கோவை கங்கா மருத்துவமனை மருத்துவர் எஸ். ராஜசேகரன் உலகிலேயே 139 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 100,000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் பங்களிப்பை வகைப்படுத்திய, பல்வேறு துறைகளில் 2% பங்களிப்பைக் கொண்ட விஞ்ஞானிகளின் பட்டியலை அமெரிக்காவின் எல்சேவியர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 1,90,064 உலக விஞ்ஞானிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் 3,353 இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். உலகளவில் 1,425 எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், இந்த ஆண்டு மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர் மற்றும் பட்டியலிடப்பட்ட இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில், கோவை கங்கா மருத்துவமனையின் டாக்டர் ராஜசேகரன் உலகிலேயே 139 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

எலும்பியல் அறுவை சிகிச்சை துறையில் இவரின் ஆராய்ச்சி குறிப்பாக, முதுகெலும்பு நோய்த்தொற்றுகள், முதுகெலும்பு குறைபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பல வெளியீடுகளில் சிறந்த 227 சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச பகுப்பாய்வுக்காக பரிசீலிக்கப்பட்டன. டாக்டர் ராஜசேகரனின் முதல் ஆய்வுக் கட்டுரை 1987 இல் வெளியிடப்பட்டது. இவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவுடன், முதுகெலும்பு காசநோய் மற்றும் பிற நோய்த்தொற்றுகளைத் தொடர்ந்து கடுமையான முதுகெலும்பு குறைபாடுகள் குறித்த இந்தக் கட்டுரை அமெரிக்க ஆய்விதழில் வெளியிட்டார்.   இவரின் ஆராய்ச்சிப் பணி முக்கியமாக கடுமையான முதுகெலும்பு குறைபாடுகள் தொடர்பான நோய்களில் அதிக கவனம் செலுத்துகிறது