பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா: 2 நாள் பள்ளிக்கு விடுமுறை

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அன்னூர் அருகே உள்ள ஓட்டர்பாளையம் ஊராட்சி அல்லி காரன்பாளையத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் 50 வயதான பள்ளி தலைமை ஆசிரியைக்கு திடீரென சளி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளியானது.

அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. அத்துடன் அவருடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.