கோவையில் 22 தீயணைப்பு பயிற்சி வீரர்கள் உள்பட 294 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவையில் தீயணைப்பு பயிற்சி பெற்று வந்த 22 வீரர்கள் உள்பட 294 பேருக்கு இன்று (12.8.2020) கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஒருமாத காலமாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அங்கு பணியாற்றி வந்த பாதுகாவலர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு பயிற்சி பெற்றுவந்த 60 வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 22 வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்காலிக தீயணைப்பு பயிற்சிப் பள்ளி அடைக்கப்பட்டது. மற்ற வீரர்களும் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கோவை அரசு மருத்துவமனையின் 23 வயது பெண் பயிற்சி மருத்துவர், கோவை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 55 வயது பெண் காவலர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 26 வயது ஆண் காவலர், வி.எச்.ரோடு காவலர் குடியிருப்பை சேர்ந்த 40 வயது ஆண்,  ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் தவிர பி.என்.புதூரில் 14 பேரும், செல்வபுரம், விளாங்குறிச்சியில் தலா 12 பேரும், கணபதியில் 9 பேரும், மேட்டுப்பாளையம், ராமநாதபுரம், மதுக்கரையில் தலா 8 பேரும், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் மற்றும் பீளமேட்டில் தலா 6 பேரும் என மொத்தம் 294 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 9 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.