கோவையில் தினந்தோறும் 3500-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது

– மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் தினந்தோறும் சுமார் 3500-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதுடன், தேவையான தளர்வுகளுடன் தொழில்நிறுவனங்கள் இயங்கவும், உரிய பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கைகளை முறையாக அடிக்கடி கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தினந்தோறும் சுமார் 3500-க்கும் மேற்பட்ட நபர்கள் வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் 5800 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று கண்டறியப்படும் வார்டுகள் மற்றும் கிராமங்கள் தோறும் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அந்தந்தப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், தேவையற்ற அச்சம் தவிர்க்கப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 1,51,217 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், (11.08.2020) அன்று வரை 7,296 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 5,508 நபர்கள் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 140நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது 1,648 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 241 நபர்கள்இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 41 நபர்கள் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், 40 நபர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும், 60 நபர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலும், 445 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கொடிசியா சிகிச்சை மையத்தில் 624 நபர்களும், அன்னூர் சசூரி கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் 26நபர்களும், மத்தம்பாளையம் காருண்யா கல்லூரியில் 108 நபர்களும், 63 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கென பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 படுக்கைகளும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 555 படுக்கைகளும், பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 160 படுக்கைகளும், வட்ட அளவிலான மருத்துவமனையில்; 471 படுக்கைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 1,722 படுக்கைகளும், கொடீசியா உள்ளிட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 1976 படுக்கைகளும், என மொத்தம் 5,524படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாநகராட்சியில் 25பகுதிகளும், ஊரகப்பகுதிகளில் 10 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது.

மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் முககவசம் அணிதல், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றதல் போன்ற அரசு வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவும், சுகாதாரத்துறை அலுவலா;கள் மற்றும் காவல்துறை அலுவலா;கள் தொடா; கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்ட சித்தா முறை சிகிச்சை மையத்தில் 180 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தற்போது 106 நபர்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி மட்டுமே சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர். 74 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்துள்ள 2,619 நபர்கள் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டபகுதிகளில் குடியிருப்போர், பொதுவெளியில் செல்லாதவாறு மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்களை கண்காணிக்க, மாவட்ட எல்லைகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் வைட்டமின் மாத்திரைகள், கபசுரக்குடிநீர் வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வீடுதேடி வழங்குதல் என மக்களின் நலன் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) மருத்துவர் காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.