பி.எஸ்.ஜி தொழில்நுட்பத்தின் முன்னாள் மாணவர் காங்கிரஸ் 2023 விழா

பி.எஸ்.ஜி தொழில்நுட்பத்தின் 6வது முன்னாள் மாணவர் காங்கிரஸ் 2023 விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசன் பேசுகையில், உலகம் முழுவதும் பரவியுள்ள பி.எஸ்.ஜி டெக், முன்னாள் மாணவர்களின் பலத்தினையும், அவர்களுடைய கல்லூரியின் மலரும் நினைவுகளை இந்த கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை அவர்களிடையே நினைவு கூறும் என பேசினார்.

சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவியான பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் இணை இயக்குநர் கல்பனா, பங்கேற்றார். அவர் பேசுகையில், தனது எலக்ட்ரோ ஆப்டிக் சென்சார்கள் மற்றும் பேலோடு துறையின் செயல்முறைகளையும், இஸ்ரோவின் வரவிருக்கும் விண்வெளி பயணங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து, கெளரவ விருந்தினரான கோவை மார்க்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸின் முதன்மை செயல் அலுவலர் வேலுசாமி, பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர் தனது கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்ததோடு, தொழிநுட்பத்தை மாற்றியமைக்க முயற்சி செய்யுங்கள் எனவும், அதில் சிக்கிக் கொள்ளாதீர் எனவும் மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

 

நிகழ்வில்  இஸ்ரோவின் வெற்றி பயணமான சந்திரயான் 3- க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய 8  பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவர்களான இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் இணை இயக்குநர் கல்பனா,  இயந்திர அமைப்புகள் பகுப்பாய்வின் துணை இயக்குநர் சுரேஷ்குமார், கட்டுப்பாட்டு இயக்கவியல் வடிவமைப்பு குழுவின் குழு இயக்குநர் விஞ்ஞானி சிவா, கட்டுப்பாடு & டிஜிட்டல் மின்னணுக் குழுவின் பிரிவுத் தலைவர் விஞ்ஞானி தினகரன், மிஷன் சிமுலேஷன் குழுவின் பிரிவுத் தலைவர் விஞ்ஞானி பரத் குமார், ஆப்டிகல் சிஸ்டம்ஸ் பகுதி எல்இஓஎஸ், துணை இயக்குநர் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், கட்டுப்பாட்டு இயக்கவியல் வடிவமைப்பு குழு விஞ்ஞானி அசோக்குமார், பணி திட்டமிடல் மற்றும் செயல்பாட்டுக் குழு  விஞ்ஞானி ரித்திகா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட பி.எஸ்.ஜி. டெக் டலேண்ட் டெஸ்டில் 163 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 669 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஜிஆர்டி ரோலிங் டிராபி எனும் பி.எஸ்.ஜி. டெக் டலேண்ட் டெஸ்ட் விருது வழங்கப்பட்டன.

மேலும், 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டம் பெற்று, அந்தந்த துறையிலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக தமது தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்கிய 16 சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான ‘யங் அலும்னி’ விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் பி.எஸ்.ஜி டெக் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் மயில்சாமி, பொதுச்செயலர் அரசு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ், முன்னாள் மாணவர் காங்கிரஸ் 2023 தலைவர் கே கார்த்திக், இணைத் தலைவர் செந்தில் குமார், கல்லூரியின் மூத்த முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.