டைடில் பார்க்கில் 75,000 மரக்கன்றுகள் நடவு

பசுமை தமிழ்நாடு கொள்கைக்காக கோவை பீளமேடு அடுத்த டைடில் பார்க் எல்காட் வளாகத்தில் இன்று 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர்  ஆணையர் பாலகிருஷ்ணன், ஹெச்டிஎப்சி வங்கியின் தமிழ்நாடு மாநில தலைவர் கேசவன் ரங்காச்சாரி மற்றும்  டைடல் பார்க் எல்காட் நிர்வாக அதிகாரி தனலட்சுமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து இந்த நிகழ்வை துவக்கி வைத்தனர்.

முன்னதாக பசுமையை காப்போம் எனும் கையெழுத்து இயக்கத்தை கையெழுத்து இட்டு துவக்கி வைத்த ஆணையர் பாலகிருஷ்ணன். “நகர வாழ்க்கையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நாம் மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதனை பராமரிப்பு செய்ய வேண்டும், நாம் அனைவருமே நகரில் ஒரு மரக்கன்றுகளை தினமும் பராமரிப்பு செய்தாலே நகருக்குள் பசுமை தழைத்தோங்கும்” என்றார்.

இதனை தொடர்த்து 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.

விழாவில் எல்காட், நிர்வாக அதிகாரி, திருமதி தனலட்சுமி பேசும் போது :- எல்காட் நிறுவனம் தமிழகத்தில் 8 இடங்களில் உள்ளது. அதில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக திட்டமிட்டுள்ளோம். அதன் முதற்கட்டமாக இன்று இங்கு 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. விரைவில் 15,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. எல்காட் மற்றும் டைடல் பார்க் மூலம் 25,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் எல்காட் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது இதன் மூலம் மேலும் 25,000 நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதன் மூலம் கோவையின் பொருளாதாரமும், வேலை வாய்ப்பும் மேம்படும் என்று பேசினார்.